தருமபுரம் ஆதீன தொடக்கப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்வில் யானை, குதிரை ஊர்வலத்துடன் பள்ளிக் குழந்தைகளுக்கு வரவேற்பு அளித்து, 'அ'கரம் எழுதி கல்வி வாழ்க்கையை தொடங்கினர்.


இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழும் நவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி பண்டிகையில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது பிரதானமாக விளங்குகிறது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 15 -ம் தேதி முதல் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.  ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 9 நாட்களிலும் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜை நடைபெறும். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது  இரவுகளே இந்த நவராத்திரி திருவிழாவாகும். நவராத்திரி முடிந்து வரும் தசமி திதியை விஜயதசமி என்று கொண்டாடி பூஜையை இந்துகள் நிறைவு செய்கின்றனர்.




பொதுவாகவே, பிரதமை அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைப்பது வழக்கம். இந்நிலையில் எல்லா திதிகளிலும் இறையம்சம் இருக்கிறது என்பதை  உணர்த்துவதற்காக நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நவராத்திரி வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும், சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்கள் படிப்புக்கு தேவையான விஷயங்களை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று அனைத்துத் தளத்திலும் தொழில் செய்பவர்கள் அயூத பூஜையை விமரிசையாகக் கொண்டாடுவார்கள். விஜயதசமி நாளில் தொடங்கப்படுகிற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம்.




இந்த நாளில் ஞானம், வித்தை, கல்வி மற்றும் யோகத்துக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் கிடைத்து சகல கலைகளிலும் சிறந்து விளங்கலாம். இந்நிலையில் இந்த நாளில் கல்வி கற்கவும், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடையவும் வழிபடுவது மிகவும் சிறந்தது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையை  வழிபடுவதும் ஆராதிப்பதும் அம்பிகைக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி, சுமங்கலிகளையும், பெண்களையும் வரவேற்று, மங்கலப் பொருட்கள் வழங்குவதும் இல்லத்தில் ஐஸ்வர்யம் பொங்கச் செய்யும், தீர்க்கசுமங்கலியாக வாழச் செய்யும் என்பதும்  நம்பிக்கை‌. இத்தகைய சிறப்புமிக்க நவராத்திரி விழா, முதல் மூன்று நாட்கள் துர்க்கை  அடுத்த மூன்று நாட்கள் மகாலஷ்மி இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி ஆகிய தெய்வங்களை ஒன்பது நாட்கள் வழிபடுவது நவராத்திரியின் சிறப்பாகும்.




வீடுகள் மற்றும் ஆலயங்களில் கொலு பொம்மைகள் அமைத்து தினசரி பக்தி பாடல்கள் பாடி நைவைத்தியம் செய்து வழிபாடு செய்வார்கள்.  நவராத்திரி பண்டிகையின் பத்தாம் நாள் விஜயதசமி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை தொடங்குவார்கள். விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு இன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது.




தொடக்கப்பள்ளியில் அதிக மாணவர் சேர்க்கைக்கான விருதினை இப்பள்ளி கடந்த ஆண்டு பெற்றுள்ளது. இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி புதிதாக பள்ளிக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு யானை, குதிரை உள்ளிட்ட மங்கள சின்னங்களுடன் தருமபுரம் ஆதீன மடத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் சென்று வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளியில் தருமபுரம் ஆதீனகட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் சிறப்பு பூஜைகளை செய்தார்‌. தொடர்ந்து ஆசிரியர்கள் புதிதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு மயில் இறகால் நாக்கில் தேன் தடவி, நெல்லில் அகரம் எழுதி அவர்களின் கல்வி வாழ்க்கையை தொடக்கி வைத்தனர். இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.