தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஆயுதபூஜையும், விஜயதசமியும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை கொண்டாடப்படும் அடுத்த நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினத்தன்று புதிய காரியங்களை தொடங்கினால் அமோகமாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கையாக கடைபிடிக்கப்படுகிறது.


குறிப்பாக, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை முதன்முதலாக விஜயதசமி நாளில் பள்ளிகளில் சேர்த்தால் அவர்கள் படிப்பில் மிகச்சிறந்தவர்களாக விளங்குவார்கள் என்று நம்புகின்றனர். இதனால், விஜயதசமியன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தனியார் பள்ளிகளில் விஜயதசமி தினத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், அரசுப்பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.


இதன்படி, விஜயதசமியான நாளை அரசுப்பள்ளிகளில்  எல்.கே.ஜி., யு,.கே.ஜி. மற்றும் 1ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியராவது கட்டாயம் நாளை பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாநில அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.