விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில்,  அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 


ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளான விஜயதசமி நாள் அன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் இந்த தினத்தில் தங்கள் குழந்தைகளைக் கை விரல் பிடித்து, நெல்லைத் தட்டில் பரப்பி, முதல் எழுத்தாக ’அ’ என்று எழுதப் பழக்குவர். விஜய தசமியை முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. 


2018 முதல்


வழக்கமாக தனியார் பள்ளிகள் இந்த தினத்தை மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதைக் கண்ட தமிழ்நாடு பள்ளிக்  கல்வித்துறை, 2018 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விஜய தசமி தினத்தில் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றது. அப்போது முதல் 5 
ஆண்டுகளாக விஜய தசமியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 


இந்த முறை 6ஆவது ஆண்டாக நாளை தமிழ்நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளன. எல்கேஜி, யூகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளுக்கும் 1ஆம் வகுப்புக்கும் உரிய வயதை அடைந்த மாணவர்கள் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர். விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிகள்  தீவிரம் காட்டி வருகின்றன. 


இதற்காக அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படும் வசதிகள், சலுகைகள், உணவுத் திட்டம், உட்கட்டமைப்பு வசதி ஆகியவை குறித்து, பள்ளிகள் விளம்பரம் செய்து வருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விளம்பரம் 
செய்யப்பட்டு வருகின்றது. 


இதையும் வாசிக்கலாம்:  APAAR: ”Pre KG முதல் PhD வரை” - ஆதார் போல் வரும் அபார்: மாணவர்களுக்கும் ’ஒரே’ திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு!


அசத்தும் அரசுப்பள்ளிகள் 


100 சதவீதம் இலவசமாக, தரமான கல்வி வழங்கப்படுவதுடன், தகுதி மற்றும் திறமையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பித்து வருகின்றன. எண்ணும் எழுத்தும் வகுப்பறை வசதியுடன் புத்தகம், குறிப்பேடு, சீருடை, காலணிகள், புத்தகப் பை, கிரேயான்கள், வண்ணப் பென்சில்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்துடன் காலை  உணவுத் திட்டமும் இலவச மதிய உணவும் பள்ளிகளிலேயே வழங்கப்படுகிறது. 


இந்த நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி அரசு விடுமுறை தினமாக  இருந்தாலும் நாளை ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியரின் வருகை முக்கியம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.