பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு தனது விருப்பத்தின்படி துணைவேந்தர் தேடல் குழுக்களை அமைப்பதற்கும் அதை ஊடகங்களுக்குச் செய்தியாக வெளியிடுவதற்கும் சிறப்பு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து இன்று அவர் தெரிவித்து உள்ளதாவது:


தேடல் குழுக்களை ஆளுநரே நியமித்தல்


’’தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் குழுக்களை தமிழக ஆளுநர் தன்னிச்சையாக அறிவித்திருப்பதை அடுத்து, தமிழக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் இன்னொரு முட்டுக்கட்டை உருவாகியிருப்பது உண்மையிலேயே துரதிர்ஷ்டமானது. துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பிரதிநிதியை இணைக்க வேண்டும் என்ற நோக்கம் நல்லதும் வரவேற்கத் தக்கதுதான் என்றாலும் ஆளுநர் மாளிகை அதை தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது. சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் விதிகள் வழிகாட்டுதல்களின்படியே தேடல் குழுக்களை அமைக்க வேண்டும். மேலும், அதை அரசாங்கம் தனது அரசிதழ் (கெஸட்) மூலம் அறிவிக்கப்பட வேண்டும். 


பல்கலைக்கழகங்களின் விதிகளில் இடம்பெற்றுள்ள அம்சங்களை ஆளுநர் மாளிகை மதிக்க வேண்டும். தேடல் குழுக்களை அமைப்பது தொடர்பாக மரபுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு தனது விருப்பத்தின்படி துணைவேந்தர் தேடல் குழுக்களை அமைப்பதற்கும் அதை ஊடகங்களுக்குச் செய்தியாக வெளியிடுவதற்கும் சிறப்பு அதிகாரமோ உரிமையோ கிடையாது. மாறாக, மாநில அரசு அது குறித்த அரசு ஆணையை முறைப்படி வெளியிட்ட பிறகே தேடல் குழு முறைப்படி செயல்படத் தொடங்கும்.


ஆளுநரின் இந்த நடவடிக்கையை தமிழக அரசு ஏற்கெனவே ஆட்சேபித்துவிட்டது. இந்நிலையில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான இந்த முட்டுக்கட்டை துணைவேந்தர் நியமனத்தை நிச்சயமாக மேலும் தாமதமாக்கும். இது பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டையும் மிக மோசமாக பாதிக்கும். இதன் விளைவாக  ஏற்கெனவே மோசமடைந்து வரும் உயர்கல்வித் தரத்தில் மேலும் தாக்கம் ஏற்படும். 


பல்கலைக்கழகங்களின் விதிகளைத் திருத்துக


பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைக் கண்டறியும் தேடல் குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை இடம் பெறச் செய்ய வேண்டும் என்று யுஜிசியின் புதிய விதிகளில் நிபந்தனை உள்ளது என்பது உண்மையே. இது அந்தந்த மாநில அல்லது பகுதிகளில் உள்ள பாரபட்சமான அல்லது  அரசியல் செல்வாக்கைத் தவிர்க்கும் என்பதால் வரவேற்கத் தக்கதே.


ஆனால், இதை ஆளுநரோ, அரசோ தன்னிச்சையாகச் செய்ய இயலாது. இந்நிலையில் துணைவேந்தர் தேடல் குழுக்களில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறச் செய்யும் வகையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் விதிகளிலும் உரிய வகையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். எனவே, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் இடம்பெறும் வகையில் பல்கைலைக்கழக விதிகளைத் திருத்துவதற்கு மாநில அரசை வலியுறுத்தும் தேவையான நடவடிக்கையில் ஆளுநரும் பல்கலைக்கழக மானியக் குழுவும் ஈடுபடவேண்டும். 


உயர்கல்வி தொடர்பான பல்வேறு விஷயங்களில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான மோதல்கள் இருந்து வருவதைக் கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம். துணை வேந்தர்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இரு தரப்பினரும் முரண்பட்ட உத்தரவுகளை அடிக்கடி பிறப்பித்து வருகின்றனர்.


தேசிய கல்விக் கொள்கையையும் பல்கலைக்கழக மானியக் குழு விதிகளையும் அமல்படுத்த வேண்டும் என்று ஒரு தரப்பினர் (ஆளுநர் தரப்பு) கூறும்போது, மத்திய ஒழுங்குமுறை அமைப்புகளான பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியவற்றின் உத்தரவுகளை அமல்படுத்தத் தேவையில்லை என்று மற்றொரு தரப்பினர் (அரசு தரப்பு) கூறி வருவது விசித்திரமானதும் வேடிக்கையானதும் ஆகும். 


துரதிர்ஷ்டமானது


இந்நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பவர்களாக ஆகிவிட்டது அவலமானது. மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பல்கலைக்கழகங்களின் நலனுக்காகவும் உயர்கல்வியின் நலனுக்காகவும் எது நல்லது எது தீயது என்று கூறும் துணிவின்றி இருப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது, வருந்தத்தக்கது.


இந்நிலையில் மாநிலத்தின் ஒட்டுமொத்த உயர்கல்வியின் நலனுக்காக பல்கலைக்கழகங்களின் வேந்தரும் (ஆளுநர்), இணைவேந்தரும் (உயர்கல்வி அமைச்சர்) முரண்படும் போக்கினைக் கைவிட்டு, இணைந்து செயல்படுவது மிகவும் இன்றியமையாதது'’. 


இவ்வாறு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.