வேலையில்லாத இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம் என்னும் புதுத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம் ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? பார்க்கலாம்.
வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ் வேலையில்லாதவர்களுக்கு பிரத்தியேக திறன் பயிற்சி, 38 தொழிற் பிரிவுகளில் 165 பயிற்சிகளை 500-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்ல, திறன் பயிற்சி பெறுவதற்கான கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்தவுள்ளது.
முதற்கட்டமாக, ஆண்டுக்கு 75 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட இருக்கின்றது. இந்த திட்டத்துக்காக முதலமைச்சர் முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளார். அதுமட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகள், எழை, எளிய மாணவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அழுப்படையில் திறன் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
18 முதல் 35 வயதுள்ள வேலையில்லாத இளைஞர்களுக்கு…
“வெற்றி நிச்சயம்” திட்டத்தில், உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களோடு இணைந்து, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 18 முதல் 35 வயதுள்ள படித்த, வேலையில்லாத இளைஞர்கள், படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்க இருக்கிறது! இதற்கான பயிற்சித் தொகையையும் தமிழக அரசே ஏற்க இருக்கிறது!
மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், இலங்கைத் தமிழர்கள், மீனவ இளைஞர்கள், சிறுபான்மையினர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு இளைஞர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என்று சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்ட பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் வழியாக கண்டறிந்து இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, 12 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
உணவுடன் கூடிய இருப்பிட வசதி
அதுமட்டுமல்ல, தொலைதூர மாவட்டங்களிலிருந்து, பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு, உணவுடன் கூடிய இருப்பிட வசதியும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்படும்!
இந்த திட்டத்தில் சேர - “ஸ்கில் வாலட்’’ என்ற செயலியை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில், எந்த நிறுவனத்தில் என்ன வேலைவாய்ப்பு இருக்கிறது? அதற்கு என்ன பயிற்சி என்று எல்லா தகவல்களும் இருக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.