அனைத்து அரசு நடுநிலை, உயர்‌ நிலை மற்றும்‌ மேல்‌நிலைப்‌ பள்ளிகளிலும் “வானவில்‌ மன்றம்‌” தொடங்கப்பட வேண்டும்‌ என்று மாநிலத் திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அறிவியல்‌ மற்றும்‌ கணிதப்‌ பரிசோதனைகளைச்‌ செய்வதற்கு குறைந்த விலையில்‌ பொருட்களை வாங்க ஒரு பள்ளிக்கு முதற்கட்டமாக ரூ.1200/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


இதுகுறித்து மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளதாவது:


'' *அனைத்து அரசு நடுநிலை, உயர்‌ நிலை மற்றும்‌ மேல்‌நிலைப்‌ பள்ளிகளிலும் இன்று “வானவில்‌ மன்றம்‌” தொடங்கப்பட வேண்டும்‌.


* வானவில்‌ மன்றத்தின்‌ தொடக்கமாக ஆசிரியர்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ ஒன்றிரண்டு எளிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்‌


* உள்ளூர்‌ அமைச்சர்கள்‌ முன்னிலையில்‌ மாவட்ட ஆட்சியர்‌, மக்கள்‌ பிரதிநிதிகள்‌ தொடக்க விழாவில்‌ பங்கேற்கச்‌ செய்ய வேண்டும்‌. துவக்கத்தின்‌ அடையாளமாக வண்ணமயமான பலூன்களை காற்றில்‌ பறக்கவிடலாம்‌.


* 6 முதல்‌ 8 ஆம்‌ வகுப்புகளுக்கு வகுப்பறைகளுக்குள்‌ கற்பிக்கப்படும்‌ பாடங்களோடு தொடர்பான அறிவியல்‌ மற்றும்‌ கணிதப்‌ பரிசோதனைகளைச்‌ செய்வதற்கு குறைந்த விலையில்‌ பொருட்களை வாங்க ஒரு பள்ளிக்கு முதற்கட்டமாக ரூ.1200/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


அறிவியல்‌ மற்றும்‌ கணித ஆசிரியர்களின்‌ பணிகளும்‌ பொறுப்புகளும்‌


* ஆசிரியர்கள்‌ தானே சோதனைகள்‌ செய்து காட்டி, மாணவர்களையும்‌ சோதனைகளைச் செய்ய ஆர்வமுட்ட வேண்டும்‌.
* ஒவ்வொரு வாரமும்‌ பாடத்துடன்‌ தொடர்புடைய கருத்துக்களை விளக்குவதற்கு ஏற்ப பொருட்களை குறைந்த விலையில்‌ வாங்கி பல்வேறு சோதனைகளைச்‌ செய்து காட்ட வேண்டும்‌. 
* குழந்தைகளை கேள்விகளைக்‌ கேட்க ஊக்குவிக்க வேண்டும்‌.
* மாணவர்கள்‌ சோதனை செய்யும்‌ புகைப்படங்கள்‌ மற்றும்‌ அவர்கள்‌ கேட்கும்‌ ஆர்வமுள்ள கேள்விகளுடன்‌ பரிசோதனைகளின்‌ ஆவணங்களை பராமரிக்க வேண்டும்‌.




*  STEM கருத்தாளர்கள்‌ பள்ளிக்கு வருகை புரியும்‌ போது அவர்களுடன்‌ இணைந்து பரிசோதனைகளை செய்து காட்டவும்‌ மற்றும்‌ வானவில்‌ மன்றத்தில்‌ மாணவர்கள்‌ ஆர்வமுடன்‌ பங்கேற்கவும்‌ ஊக்குவிக்க வேண்டும்‌.
* கலந்துரையாடல்கள்‌, விரிவுரைகள்‌, பயிற்சி பட்டறை, பணியிடை பயிற்சிகள்‌ ஆகியவற்றில்‌ ஆசிரியர்கள்‌ தவறாமல்‌ கலந்து கொள்ள வேண்டும்.‌
* அறிவியல்‌ நிறுவனங்களுக்கு களப்‌ பயணம்‌ ஏற்பாடு செய்யப்படும்‌போது மாணவர்கள்‌ பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்‌.


தலைமை ஆசிரியர்களின்‌ பணிகளும்‌ பொறுப்புகளும்‌


* வழக்கமான வகுப்புகளில்‌ எந்த மாற்றமும்‌ இல்லாமல்‌ தேவையான செயல்பாடுகளைத்‌ திட்டமிடவும்‌, ஒழுங்கமைத்து எளிதாக செயல்படவும்‌ ஒரு குழுவிற்கு அதிகபட்சம்‌ 60 மாணவர்களுக்குள்‌ இருத்தல்‌ வேண்டும்‌.


* குழு அடிப்படையில்‌ செயல்பாடுகளை அமைக்கும்‌பொழுது ஒவ்வொரு தொகுதிக்கும்‌ ஒரு ஓடிபி பெற்று கருத்தாளர்களுக்கு வழங்க வேண்டும்‌.


* பெற்றோர்‌ கூட்டம்‌ மற்றும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு கூட்டத்தின்‌போது இத்திட்டம்‌ தொடர்பான அனைத்து தகவல்களையும்‌ தெரிவிக்க வேண்டும்‌.


* வாராந்திர வானவில்‌ மன்றம்‌ நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்‌,


* STEM கருத்தாளர்களால்‌ மேற்கொள்ளப்படும்‌ செயல்‌ விளக்க கூட்டங்களில்‌ ஆசிரியர்கள்‌ பங்கேற்று மாணவர்களை ஊக்குவிப்பதன்‌ மூலம்‌ அவர்களின்‌ வழக்கமான வகுப்பறை செயல்பாடுகளில்‌ அன்றாட வாழ்வில்‌ சந்திக்கும்‌ அறிவியல்‌ சார்‌ உண்மைகளை எளிதில்‌ உணர உதவ வேண்டும்‌.


கருத்தாளர்களின்‌ பணிகளும்‌ பொறுப்புகளும்‌


* பள்ளித்‌ தலைமையாசிரியர்களை அணுகி கருத்தாளர்கள்‌ பள்ளியில்‌ தாங்கள்‌ மேற்கொள்ள வேண்டிய அமர்‌வுகளுக்கான நாள்‌ மற்றும்‌ நேரத்தை முன்னதாகவே நிர்ணயித்துக்‌கொள்ள வேண்டும்‌.


* அறிவியல்‌ மற்றும்‌ கணித செயல்பாடுகளுக்கு தேவையான உபகரணங்கள்‌ மற்றும்‌ சோதனைகளுக்கு தேவையான வேதிப்‌ பொருட்களுடன்‌ பள்ளிக்கு உரிய நேரத்தில்‌ செல்ல வேண்டும்‌.


* பயன்பாட்டில்‌ பதிவேற்றப்பட்ட வீடியோக்கள்‌ மற்றும்‌ பரிசோதனை ஆவணங்களைப்‌ பார்ப்பதன்‌ மூலம்‌ அமர்வுக்குத்‌ தயார்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌.


* பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களிடையே போதுமான அளவுக்கு தனிமனித உறவுகளைப்‌ பேணுதல்‌ வேண்டும்‌.


* மாணவர்கள்‌ தங்களின்‌ கருத்துக்களை வகுப்பறை சூழலில்‌ பிற மாணவர்களுடனும்‌ ஆசிரியர்களுடனும்‌ கலந்துரையாட ஊக்குவிக்க வேண்டும்‌.


* மாணவர்கள்‌ விரும்பி ஏற்கொள்ளக்கூடிய வகையில்‌ தங்களுடைய விளக்கங்களையும்‌ கருத்துக்களையும்‌ வகுப்பறையில்‌ எளிமையான முறையில்‌ மென்மையுடன்‌ கூடிய கருத்துப்‌ பரிமாற்றம்‌ மூலம்‌ வழங்குதல்‌ வேண்டும்‌.


* இந்த திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செயலியில்‌ அறிவியல்‌ மற்றும்‌ கணிதத்தில்‌ ஆர்வம்‌ கொண்ட மாணவர்கள்‌ கேட்கும்‌ கேள்விகளைப்‌ பதிய வேண்டும்''.‌


இவ்வாறு மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.