அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வானவில் மன்றம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டம் திருச்சி மாவட்டம், காட்டூரில் உள்ள பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 


வயிற்றுப் பசியில் இருந்து விடுபட்டு அறிவுப் புரட்சி


40 ஆண்டுகளுக்கு முன்னர் 1982ஆம் ஆண்டு இதே பள்ளியில்தான் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன்மூலம் குழந்தைகளின் வயிற்றுப் பசி போக்கப்பட்டது. பசியைப் போக்குவதற்காகவே மாணவர்கள் பள்ளி வந்து கற்றனர். பல தடைகளைக் கடந்து, படிகள் ஏறி வாழ்வில் முன்னேறினர். 


சத்துணவுத் திட்டம் தொடங்கிய நாள் முதல் 1982 மே 1990 வரை பள்ளிக் கல்வித்துறை, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியது. ஜூன் 1990 முதல் செப்டம்பர் 1992 வரை ஊரக வளா்ச்சித்துறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தது. 



அதைத் தொடர்ந்து அக்டோபர் 1992 முதல் செப்டம்பர் 1997 வரை சமூக நலத்துறையும் அக்டோபர் 1997 முதல் 19 ஜூலை 2006 வரை ஊரக வளா்ச்சித்துறையும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தின. அப்போதில் இருந்து இன்று வரை சமூக நலத்துறை சத்துணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.




இந்நிலையில் இதே பள்ளியில் அறிவுப் புரட்சியை ஏற்படுத்தும், 'வானவில் மன்றம்' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.



வானவில் மன்றத்தின் நோக்கங்கள் 


’எங்கும் அறிவியல், யாவரும் கணிதம்’ என்பதே வானவில் மன்றத்தின் நோக்கமாகும். குழந்தைகளிடையே இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல் கற்றலுக்கு பயன்படுத்துதல், அறிவியல் கற்பதன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், இந்த ஆர்வத்தின் மூலம் புதுமைகளைக் காணும் மனப்பாங்கினை வளர்த்தெடுத்தல், தாம் பெற்ற அறிவினை தமக்கான மொழியில் பகிர்ந்து அறிவியல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான்மையை பரவலாக்குதல், அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணர்தல், சமூகவியல் இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை வானவில் மன்றத்தின் நோக்கங்கள் ஆகும்.


ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி 


அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியலையும் கணிதத்தையும் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கற்பித்தலில் இதுவரை அவர்கள் கையாண்ட வழிமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட ஆலோசனைகள் வழங்குவதற்கும், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தில் பங்கு பெற விருப்பம் தெரிவித்த ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.




அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட 710 பேர் கருத்தாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 38 மாவட்டங்களில் உள்ள 13,200 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 20 லட்சம் மாணவர்களைச் சந்திக்க உள்ளனர். அப்போது வகுப்பு ஆசிரியர்களின் துணையுடன் கற்றல் இணை செயல்பாடுகள், அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


திருச்சி மாவட்டம், காட்டூரில் உள்ள பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 


வயிற்றுப் பசியில் இருந்து விடுபட்டு அறிவுப் புரட்சி