வானமே எல்லை உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மூலம் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம் என்று துறைசார் நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கலை, அறிவியல் படிப்புகளுக்கான தேவை, முக்கியத்துவம், எதிர்காலம் குறித்து கல்வியாளர் அஸ்வினிடம் ஏபிபி நாடு சார்பில் பேசினோம்.

யாருக்கெல்லாம் ஆனவை கலை, அறிவியல் படிப்புகள்?

புரொஃபெஷனல் படிப்புகளைப் படிப்பவர்கள், தான் என்ன வேலைக்குச் செல்ல வேண்டும் என்று தெரிந்து படிப்பார்கள். ஆனால் கலை, அறிவியல் படிப்புகள் டிகிரி படிப்புகள். எதற்காக இந்த டிகிரியைப் படிக்க வேண்டும் என்று புரிந்து படித்தால் போதும்.

எதற்காக இந்தப் படிப்பைப் படிக்கிறோம்? எந்தக் கல்லூரியில் படிக்கிறோம் என்ற தெளிவு இருந்தால் போதுமானது. எந்த ஒரு படிப்பும் கீழ்த்தரமான படிப்பு கிடையாது.

கலை அறிவியல் படிப்புகள் என்றால் என்ன?

கலை படிப்புகள் மற்றும் மானுடவியல் சார்ந்து கற்பிக்கப்படுபவை ஆர்ட்ஸ் வகைமைக்குள் வரும். இதில் பி.காம், பி.ஏ. எகனாமிக்ஸ், வரலாறு, சோஷியாலஜி, அரசியல் அறிவியல், பிஎஸ்டபிள்யு உள்ளிட்ட படிப்புகள் வரும். சமூகத்துக்கு சேவையாற்றக்கூடிய படிப்புகள் இதில் அடங்கும்.

அறிவியல் படிப்புகள் என்றால், பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல், உயிரியல் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து படிக்கும் படிப்புகள் ஆகும்.

என்ன படிக்கலாம் என்பது குறித்த புரிதலோ, ஆசையோ, ஆர்வமோ இல்லாமல் இருக்கும் மாணவர்கள், என்ன உயர் கல்வியைத் தேர்வு செய்தால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்?

காமர்ஸ் படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆனால் காமர்ஸ் படித்தால் பி.காமில் மட்டும் சேர வேண்டியதில்லை. எகனாமிக்ஸ் சேர்ந்தும் படிக்கலாம். எதிர்காலத்தைத் திட்டமிட்டு சேர்வது முக்கியம்.

கலை, அறிவியல் படிப்புகளைப் பொறுத்தவரை, நல்ல சம்பளம் வாங்க முதுகலை படிப்பு கட்டாயமா?

இளங்கலை கலை, அறிவியல் படிப்புகளைப் படித்தவர்கள் உயர் கல்விக்குச் செல்லலாம் அல்லது அரசு வேலைக்குத் திட்டமிடலாம்.

காமர்ஸ் மாணவர்கள், ஆப்டிட்யூட், லாஜிக்கல் ரீசனிங், வெர்பல் திறன் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றால், வேலைவாய்ப்புக்கும் உயர் கல்விக்கும் சிறப்பான இடத்தைப் பெற முடியும். இதைத்தான் பிராப்ளம் சால்விங் திறன் என்பார்கள் என்று கல்வியாளர் அஸ்வின் தெரிவித்தார்.

கல்வியாளர் அஸ்வின் ஏபிபி நாடுவுக்கு அளித்த முழு பேட்டியையும் காண: