வாழ்வில் முன்னேற ஆசைப்படுபவர்களுக்கும் உழைக்கத் துடிப்பவர்களுக்கும் எப்போதும் வானம்தான் எல்லையாக இருக்கிறது. படித்து வெற்றியை ருசிக்க ஆசைப்படும் மாணவர்களுக்கும் அப்படித்தான்.
10, 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் உயர் கல்விக்கு ABP நாடு தொடர்ந்து வழிகாட்டி வருகிறது. வானமே எல்லை என்ற தொடரின்கீழ் இந்த வழிகாட்டல் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், உளவியல் படிப்புகளுக்கு என்ன எதிர்கால இருக்கிறது? அதில் எப்படி படிப்பைத் தேர்வு செய்யலாம்? கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி? படிக்கும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
உளவியல் படிப்புகள் குறித்து விளக்கமாகப் பேசினார் தனியார் கல்லூரியில் உளவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் சாலமன். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:
மாறி வரும் வாழ்க்கை முறையில், குடும்பச் சூழலில் உளவியல் துறை ஏன் முக்கியம்? ஓர் உளவியலாளரின் தேவை எந்த அளவுக்கு இருக்கிறது?
இன்றைய சூழலில், பிரச்சினைகளுக்கு நடுவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொலை, கொள்ளை, போதை பழக்கம் அதிகரித்திருக்கின்றன. விவாகரத்துகள் உயர்ந்திருக்கின்றன. ஆனால் பிரச்சினைகளுக்கு ஏற்ற அளவில் உளவியலாளர்கள் இல்லை. குறைந்த அளவில்தான் இருக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் கூட உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட ஆரம்பித்து இருக்கிறார்கள். அதனால் தொழில்முறை உளவியலாளர்களின் தேவை அதிகமாகவே இருக்கிறது.
வீடியோ வடிவில் இந்தப் பேட்டியை முழுமையாகக் காண:
இப்போதெல்லாம் யூடியூபர்கள், பிரபலங்கள் எனப் பல தரப்பினர் உளவியல் ஆலோசனைகளைக் கூறுகிறார்களே..! அவர்களுக்கும் நீங்கள் அளிக்கும் கவுன்சிலிங்குக்கும் என்ன வித்தியாசம்?
பேசத் தெரிந்தவர்கள் எல்லோருமே கவுன்சிலிங் கொடுக்க முடியாது. நம் வீட்டில் ஏதேனும் ரிப்பேர் ஆகியிருந்தால் நாமே சரிசெய்வோம். ஆனால் அது எத்தனை நாட்களுக்கு நீடித்திருக்கும் என்று தெரியாது. பயிற்சி பெற்ற நிபுணர்கள் அதைச் செய்தால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும். அது உளவியலுக்கும் பொருந்தும். அட்வைஸ் அளிப்பது வேறு. கவுன்சிலிங் கொடுப்பது வேறு.
பிளஸ் 2 முடித்த யாரெல்லாம் சைக்காலஜி படிக்கலாம்?
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் சைக்காலஜி படிக்கலாம். எனினும் அறிவியல் படித்த மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உண்டு.
சைக்காலஜி துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன?
பி.எஸ்சி. சைக்காலஜிதான் அடிப்படை படிப்பு. அதேபோல ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி, அப்ளைடு சைக்காலஜி ஆகிய படிப்புகள் உள்ளன.
சைக்காலஜி இளநிலைப் படிப்பு படித்தால் போதுமா? முதுநிலை படிக்க வேண்டுமா?
இளநிலைப் படிப்பை முடித்து, உளவியலாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து, பிராக்டிஸைத் தொடங்கலாம். எனினும் என்னைப் பொறுத்தவரை இந்தத் தொழில் மனித உணர்ச்சிகளைக் கையாள்வது என்பதால், முதுநிலைப் படிப்பு அவசியம்.
வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?
அரசே உளவியல் படிப்பு முடித்தவர்களுக்கு வேலை தரக் காத்திருக்கிறது. என்ஜிஓக்கள் எனப்படும் தொண்டு நிறுவனங்களில் சைக்காலஜிஸ்டுகள் தேவைப்படுகிறார்கள். ஸ்போர்ட்ஸ் சைக்காலஜிஸ்ட் ஆகலாம். கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்டாக மருத்துவமனைகளில் பணியாற்றலாம். அதேபோல வெளிநாடுகளில் சைக்காலஜிஸ்ட் படித்தவர்களுக்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது.
படிக்கும்போது கூடுதலாக எதையேனும் கற்க வேண்டுமா?
படிக்கலாம். கவுன்சிலிங் பயிற்சி எடுக்கலாம். சான்றிதழ் படிப்புகளை படிப்பதன் மூலம் கூடுதல் நிபுணத்துவம் பெறலாம். புரிதலை அளிக்கத் தேவையான பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.
இவ்வாறு முனைவர் சாலமன் தெரிவித்தார்.
மேலே உள்ள வீடியோவை க்ளிக் செய்தும் பேட்டியை முழுமையாகக் காணலாம்.