ரூ.20,000 கோடி நிதி திரட்டும் முடிவு வாபஸ்
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மூலதனம் திரட்டும் நோக்கில், எஃப்.பி.ஓ மூலம் பங்குகளை வெளியிடும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆனால், ஹிண்டென்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் காரணமாக, அதானி நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக, எதிர்பார்த்ததை காட்டிலும் மந்தமாகவே அந்நிறுவனத்தின் பங்குகள் விற்பனையாகின. எஃப்.பி.ஓ முறையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் ரூ.3,112 விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பங்குச்சந்தையில் அதன் விலை ரூ.2000 அளவிற்கு சரிந்தது. இதையடுத்து ரூ.20 ஆயிரம் கோடி மூலதனத்தை திரட்டும் நோக்கிலான, எஃப்.பி.ஓ பங்குகளை விற்பனை செய்யும் முடிவை திரும்பப் பெறுவதாகவும், ஏற்கனவே அந்த பங்குகளை வாங்குவதற்கான பணத்தை செலுத்தியவர்களுக்கு, அவர்களுக்கான பணம் திரும்ப வழங்கப்படும் என்றும், அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் விளக்கம்:
இதுதொடர்பான அறிக்கயில், ”முன்னோடியில்லாத சூழ்நிலை மற்றும் தற்போதைய சந்தை ஏற்ற இறக்கத்தை கருத்தில் கொண்டு, நிறுவனம் தனது முதலீட்டு சமூகத்தின் நலனைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. FPO வருவாயைத் திருப்பித் தருகிறது மற்றும் முடிக்கப்பட்ட பரிவர்த்தனையைத் திரும்பப் பெறுகிறது. முதலீட்டாளர்களின் நலன் மிக முக்கியமானது. எனவே எந்தவொரு சாத்தியமான நிதி இழப்புகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்க, FPO உடன் செல்ல வேண்டாம் என்று வாரியம் முடிவு செய்துள்ளது” என அதானி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னடைவு:
இந்த நிதி திரட்டல் அதானிக்கு முக்கியமானதாக கருதப்பட்டது. அந்த குழுமத்தின் கடனைக் குறைக்கும் நடவடிக்கையாக பார்க்கப்பட்டது மட்டுமின்றி, தனது மிகப்பெரிய வணிகத்தை எதிர்கொள்ளும் நேரத்தில் நம்பிக்கையின் அளவீடாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த நிதி திரட்டல் தோல்வி கண்டிருப்பது, அதானி குழுமத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடம்
மத்திய அரசின் பட்ஜெட்டின் தாக்கமாக இந்தியாவின் பங்குச்சந்தையில், அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன. ஆனால், அதானி குழுமத்தின் பங்குகள் மட்டும் தொடர்ந்து சரிவையே சந்தித்தன. நேற்றைய நாளில் அவரின் சொத்து மதிப்பு ரூ.6.85 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நாளின் முடிவில் அது ரூ.6.1 லட்சமாக சரிவடைந்துள்ளதாக போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதோடு, ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் எனும் பெருமையையும், இந்தியாவின் மற்றொரு முக்கிய தொழிலதிபரான அம்பானியிடம் இழந்துள்ளார்.
மாபெரும் சரிவு ஏன்?:
இந்த வார தொடக்கத்தில் உலகின் டாப் 3 பணக்காரர்களில் ஒருவராக இருந்த இந்தியாவின் கவுதம் அதானி, பங்குச்சந்தையில் ஏற்பட்ட தடாலடி வீழ்ச்சியின் காரணமாக, உலக மெகா கோடீஸ்வரர்கள் வரிசையில் 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சரியான மதிப்பீடு இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு சில தினங்களிலேயே அவரது சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது. ஆய்வறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே அதானியின் சொத்து மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.