2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 14,624 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


நாடு முழுவதும் கடந்த மே மாதம் 28ஆம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதினர். இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வு நடைபெற்று, 15 நாட்களுக்குள்ளாகத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.


தேர்வர்கள் https://www.upsc.gov.in/CSP2023_WR_Eng_12062023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளைக் காணலாம். 


அதேபோல https://www.upsc.gov.in/CSP_2023_WRWN_En_120623.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வர்களின் பதிவெண் மற்றும் பெயரைக் காண முடியும். 


தேர்வு முடிவுகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அல்லது விளக்கம் தேவைப்படும் சூழலில், தேர்வர்கள் டெல்லி, ஷாஜகான் சாலையில் உள்ள சேவை மையத்தை அணுகலாம். 


 தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் 5 மணி வரை, இந்த சேவை மையத்தைத் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம். 


கூடுதல் விவரங்களுக்கு: 011-23385271, 011-23098543 அல்லது 011-23381125 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)  சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது.


இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.


2022ஆம் ஆண்டில் 933 பேர் தேர்ச்சி 









முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  2023ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் மே 18 வரை தலைநகர் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 23 அன்று அறிவிக்கப்பட்டன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.