ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசின் உயர்நிலையிலான நிர்வாகப் பணிகளுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஒரு நாளைக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்றே (மார்ச் 6) விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.
யுபிஎஸ்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு ஐஇஎஸ் (IES) தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில் மூன்று கட்டங்களிலும் தேர்ச்சி பெற்று, தெரிவு செய்யப்படுவோருக்கு அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், பணிகள் ஒதுக்கப்படும்.
வயது வரம்பு என்ன?
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்களுக்கு வயது குறைந்தபட்சம் 21 வயதில் இருந்து, 32 வயது வரை இருக்கலாம். எனினும் சமூகங்களின் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
என்ன தகுதி?
பட்டப் படிப்பை முடித்த யார் வேண்டுமானாலும் யுபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
யுபுஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில், முதல் முறையாக விண்ணப்பிக்கும் தேர்வர்கள், பெயர், பாலினம், பிறந்த தேதி, தந்தை, தாய் பெயர், மொபைல் எண், இ- மெயில் முகவரி உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை உள்ளிட்டு, முன்பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள், இ – மெயில் முகவரி, மொபைல் எண், ஒரு முறை பதிவு எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவிட்டு, ஓடிபியை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசித் தேதி கடைசித் தேதியாக இருந்தது. எனினும் சர்வரில் கோளாறு ஏற்பட்ட நிலையில், விண்ணப்பிக்க ஒரு நாள் அவகாசத்தை நீட்டித்து யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி இன்று மாலை 6 மணி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் தேர்வு எங்கே?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய நகரங்களில் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது.
அனுமதிச் சீட்டு https://upsconline.nic.in என்ற இணையப் பக்கத்தில் வெளியிடப்படும். அதைத் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தபாலில் எந்த அனுமதிச் சீட்டும் வெளியிடப்படாது. விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்யும் புகைப்படம், சமீபத்திய ஒன்றாக இருக்க வேண்டும். குறிப்பாக அறிவிக்கை வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு தகவல்களுக்கு https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-24-engl-140224.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, முழு அறிவிக்கையைக் காணலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: 011-23385271/ 011-23381125/ 011-23098543 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
யுபிஎஸ்சி இணையதள முகவரி: https://upsc.gov.in/