2025ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 25ஆம் தேதி நடைபெறும் என்று யூபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
3 கட்டங்களாக யூபிஎஸ்சி தேர்வு
நாடு முழுவதும் மத்திய அரசுப் பணிகளில் சேர யூபிஎஸ்சி பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. இந்தத் தேர்வில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு முக்கியமானதாகவும் மதிப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்தத் தேர்வு முதல்நிலை, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் எந்தத் தேர்வில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் முதலில் இருந்து எழுத வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் சுமார் 10 சதவீதம் தேர்வர்கள் இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது மெல்ல மெல்லச் சரிந்து 5 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை
இந்த நிலையில், 2024- 25ஆம் ஆண்டின் அனைத்து மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை, யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தேர்வர்கள் 2025 ஜனவரி 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்பு
அதேபோல, சிஐஎஸ்எஃப், சிபிஐ, பொறியியல் சேவை, சிடிஎஸ், ஐஇஎஸ்/ ஐஎஸ்எஸ் முதல்நிலை, முதன்மைத் தேர்வுகள், இந்திய வனத்துறை சேவை உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிக்கை குறித்த அறிவிப்பு தேதிகள் வெளியாகி உள்ளன.
இதில் எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு நடைபெறும் தேதிகளும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. எனினும் இவை அனைத்து உத்தேசமான தேதிகள் மட்டுமே, இவை மாறுதலுக்கு உட்பட்டவை என்றும் யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், தற்போது திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வர்கள் https://upsc.gov.in/sites/default/files/RevisedAnnualCalendar-2025-Engl-220824.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, எந்தெந்த தேதிகளில் என்னென்ன தேர்வுகள் என்பதை அறிந்துகொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://upsc.gov.in/