புதிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு தயாராக இருந்ததாகவும் கடைசி நேரத்தில் பல்டி அடித்துவிட்டது எனவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்துள்ளார்.


இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. இதில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்.பிக்கள் முழக்கம் இட்டனர். அப்போது பேசிய திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், “பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்காது. அதனால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தராமல் இருப்பது கண்டனத்திற்குரியது. இது பழிவாங்கும் செயல்” எனப் பேசினார்.


 






இதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் “தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக கூறுவது தவறு. தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்குவதற்கான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராகவே உள்ளது. பி.எம்ஸ்ரீ திட்டத்தில் திமுக அரசு U TURN அடித்துள்ளது.  


மாணவர்களின் கல்வியை வைத்து திமுக அரசியல் செய்கிறது. பிஎம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கும் தமிழ்நாட்டின் சூப்பர் முதலமைச்சர் யார்? பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திமுக அரசு கையெழுத்திட தயாராக இருந்தது. சூப்பர் முதல்வரின் பேச்சை கேட்டு கடைசி நேரத்தில் கையெழுத்திட மறுத்தனர்.


தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு பாழாக்குகிறது. பாஜக ஆளாத மாநிலங்களும் இந்த புதிய கல்வி கொள்கை திட்டத்தை ஏற்றுள்ளன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் இந்த திட்டத்தை ஏற்றுள்ளன. தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை.


பிஎம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக வந்த தமிழக அரசு திடீரென முடிவை மாற்றியது ஏன்? தமிழக கல்வி அமைச்சருடன் வந்த திமுக எம்.பிக்கள் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக என்னிடம் கூறினர்.


பிம்.ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்றது கனிமொழிக்கும் தெரியும். எனது சகோதரி கனிமொழி என்ன நடந்தது என்பதை திமுக எம்.பிக்களுக்கு புரிய வைக்க வேண்டும். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பது குறித்து திமுக எம்.பி கனிமொழி விளக்கம் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.


இதையடுத்து தமிழ்நாட்டுக்கு நீதி வேண்டும் என திமுக எம்.பிக்கள் மக்களவையில் முழக்கங்களை எழுப்பினர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.


இதைத்தொடர்ந்து மக்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.