மாணவர்கள் படிப்பை முடித்து 6 மாதங்களுக்குள் பட்டம் வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பட்டம் வழங்காததால் ஏற்படும் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு யுஜிசி இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பல்கலைக்கழக மானியக் குழு செயலர் ரஜனிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''உயர் கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளுக்கான பட்டங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகப் பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் புகார்கள், குறைபாடுகள் வந்தவண்ணம் உள்ளன.
பல்கலைக்கழகப் பட்டம், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை வழங்குவதில் தாமதம் செய்வதால், மாணவர்களி உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. இதை ஆணையம் தீவிரமான பிரச்சினையாகப் பார்க்கிறது. முன்னதாக இதுகுறித்துக் கடந்த 2016ஆம் ஆண்டே நெறிமுறைகள் வெளியாகின.
ஒரு படிப்பை வெற்றிகரமாக முடித்தபிறகு பட்டத்தை வாங்குவது என்பது ஒரு மாணவரின் உரிமை இதைக் கருத்தில் கொண்டு, 180 நாட்களுக்குள் பட்டத்தை வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவிக்கிறது. இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள், பல்கலைக்கழக மானியக் குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதனால் யுஜிசி விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றி, உரிய காலத்துக்குள் பட்டங்களை வழங்குமாறு, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல தேவைப்படும் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (provisional degree) வழங்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது''.
இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு செயலர்ரஜனிஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை 2020-ஐ யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதுகலைப் படிப்பைப் படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் இளங்கலைப் படிப்புகளை அறிமுகம் செய்ய யுஜிசி திட்டமிட்டு வருகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, முனைவர் ஆய்வுப் படிப்பான பிஎச்.டி. படிக்க விரும்புவோர், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இனி முதுகலை படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் 4 ஆண்டுகால இளங்கலைப் படிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல பிஎச்.டி. படிப்பில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கவும் யுஜிசி முடிவெடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்