யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய சமத்துவ விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. புது விதிகள் தெளிவற்றவை மற்றும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு கொண்டவை என்றும் தெரிவித்துள்ள நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, 2012ஆம் ஆண்டு யுஜிசி விதிமுறைகளையே பின்பற்றவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Continues below advertisement

பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளை மீண்டும் வரைவு செய்யவும் யுஜிசிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை மீண்டும் மார்ச் 19ஆம் தேதி நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று (ஜனவரி 29) காலை யுஜிசி சமத்துவ விதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து இருந்த நிலையில், நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

நடந்தது என்ன?

பல்கலைக்கழக மானியக் குழு, உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்காக வெளியிட்ட 2026ஆம் ஆண்டிற்கான புதிய சமத்துவ விதிமுறைகள் (2026 UGC regulation) நாடு முழுவதும் கடும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளன. குறிப்பாக, இந்த விதிகள் பொதுப்பிரிவு (General Category) மாணவர்களுக்கு எதிராக, ஒரு சார்பாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சமத்துவ விதிகள்

கல்வி நிலையங்களில், சாதி, பிறப்பு, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக் கூடாது என்று கூறப்பட்டது. உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

எனினும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் 2025ஆம் ஆண்டு வரைவு விதிகளில் இருந்த "பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீதான அபராத நடவடிக்கை" குறித்த அம்சம், இறுதி விதிகளில் நீக்கப்பட்டுள்ளது என்றும் புகார் எழுந்தது. இது பொதுப்பிரிவு மாணவர்கள் மீது தவறான புகார்கள் அளிக்க வழிவகுக்கும் என்றும், அவர்கள் தங்களைப் தற்காத்துக்கொள்ள வழியில்லாமல் போகும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இதுதொடர்பாக https://www.ugc.gov.in/pdfnews/1881254_UGC-Promotion-of-Equity-in-HEIs-Regulations-2026.pdf என்ற இணைப்பில் யுஜிசி வெளியிட்ட விதிகளைக் காணலாம்.