இந்தியாவின் 2026 - 2027ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை வரும் 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. உலகின் முக்கியமான நாடுகளில் ஒன்றாக மக்கள்தொகை, பொருளாதாரம், வர்த்தகம் என பல வகைகளிலும் இந்தியா முக்கியமான நாடாக உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்:
இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் என்னவென்றால், கடந்தாண்டு தீவிரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசு பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பதிலடியே காரணமாக அமைந்துள்ளது.
பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஆவேசம் அடைந்த இந்திய அரசு, பாகிஸ்தானின் உள்ளே புகுந்து 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றது. இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா தனது பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு நிதி அதிகரிக்க திட்டம்:
இதற்காக, வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கையில் கடந்தாண்டு பட்ஜெட்டை காட்டிலும் 20 சதவீதம் அதிக நிதி ஒதுக்கீடு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புத்துறைக்கு ரூபாய் 6 லட்சத்து 81 ஆயிரத்து 210 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2024ம் ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் இந்த தொகை 9.53 சதவீதம் அதிகம் ஆகும். கடந்தாண்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மட்டுமின்றி உலகளவில் நடந்து வரும் பதற்றமான சூழல் காரணமாக, இந்தியாவின் எல்லை பாதுகாப்பு மற்றும் நாட்டின் உட்புற பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டிய பொறுப்பும் இந்தியாவிற்கு உருவாகியுள்ளது. .
புதிய அதிநவீன ஆயுதங்கள்:
அதிநவீன தொழில்நுட்பங்கள், ஏஐ தொழில்நுட்ப வசதி போர்க்கருவிகள் என பல்வேறு புதிய தொழில்நுட்ப போர் கருவிகள், அதிநவீன போர் விமானங்களை வாங்கவும் இந்தியா தயாராகி வருகிறது. இது மட்டுமின்றி, வரும் பட்ஜெட்டில் இந்திய பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, இந்திய பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதமாக உள்ளது. இதை 74 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை எப்போதும் பதற்றமாக இருந்து வரும் சூழலில், இந்தியாவிற்கு சவாலாக திகழும் சீனா வடகிழக்கு மாநிலங்களில் எல்லையில் அவ்வப்போது பிரச்சினை அளித்து வருகிறது.
எல்லை பாதுகாப்பு:
குறிப்பாக, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சில பகுதிகளை கைப்பற்றும் நோக்கத்தில் சீனா செயல்பட்டு வருகிறது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு அத்துமீறி ஊடுருபவர்கள் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. மேலும், தற்போது வங்கதேசதம் - இந்தியா உறவும் சுமூகமாக இல்லாததால் அதற்கான பாதுகாப்பு பணிகளையும் இந்தியா கவனமாக கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வலுவான பாதுகாப்பை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருந்தாலும், தற்போது இருப்பதைக் காட்டிலும் மேலும் பன்மடங்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய சூழல் இந்தியாவிற்கு ஏற்பட்டிருப்பதால் வரும் பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கான நிதி வழக்கத்தை விட பன்மடங்கு இருக்கும் என்பது உறுதியாகும்.
