முறைகேடு புகார்கள் காரணமாக யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மறு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நெட் தேர்வு நடைபெற உள்ளது.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நெட் நுழைவுத் தேர்வு, இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படும் என்று அண்மையில் யுஜிசி தெரிவித்தது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி முறை நடத்தப்படுகிறது.
ஜூன் 19ஆம் தேதி நடந்த தேர்வு
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான ஜூன் மாத அமர்வு, ஜூன் 19ஆம் தேதி நடத்தப்பட்டது. 1,205 மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வை 9,08,580 பேர் எழுதினர். எனினும் நீட் தேர்வு முறைகேடுகள் சர்ச்சையானதை எடுத்து, நெட் தேர்விலும் மோசடி நடந்ததாகக் கூறப்பட்டது. தொடர்ந்து நெட் தேர்வையே தேசியத் தேர்வுகள் முகமை ரத்து செய்தது. தொடர்ந்து மறுதேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எந்தெந்த நாட்களில் தேர்வு?
83 பாடங்களும் எந்தெந்த நாட்களில் நடத்தப்படும் என்ற விவரங்களை அட்டவணையில் காணலாம்.
எனினும் தேர்வு மையங்களின் விவரங்கள், ஹால் டிக்கெட் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
தேர்வர்கள் இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in