கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே ( அக்.31ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும். முன்னதாகத் தேர்வுக்கான நெட் தேர்வின் விண்ணப்ப அவகாசம் அக்.28ஆம் தேதியில் இருந்து அக்.31ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant Professor) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது.
ஜூன் மாத அமர்வு
2023ஆம் ஆண்டுக்கான ஜூன் மாத உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. தேசிய தகுதித் தேர்வு, ஜூன் 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டிசம்பர் மாத அமர்வுக்கான தேசியத் தகுதித் தேர்வு டிசம்பர் 6 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் மாணவர்கள் தங்களின் அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்குத் தேர்வர்கள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். அன்று தொடங்கிய விண்ணப்பப் பதிவு, அக்டோபர் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவு பெறுவதாக இருந்தது. எனினும் மாணவர்கள் நலன் கருதி விண்ணப்ப அவகாசம் அக்.28ஆம் தேதியில் இருந்து அக்.31ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர்கள் நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். நவம்பர் கடைசி வாரத்தில் அனுமதிச் சீட்டை மாணவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினருக்கு - ரூ.1,150
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்/ ஓபிசி (க்ரீமி லேயர் அல்லோதோர்) - ரூ.600
எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளி/ மூன்றாம் பாலினத்தவர் - ரூ.325
UGC NET December 2023 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் ugcnet.nta.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம் ஆகும்.
* முகப்புப் பக்கத்தில் UGC NET December 2023 Registration open - Click Here என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* புதிதாக ஒரு பக்கம் தோன்றும். அதில் பதிவு செய்து, கேட்கப்படும் தகவல்களைப் பூர்த்தி செய்யவும்.
* தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
* அதேபோல தேர்வர்கள் https://ugcnet.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
விவரங்களை முழுமையாகக் காண https://ugcnet.nta.ac.in/images/public-notice-ugc-net-december-2023-for-application.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
கணினி வழியில் ஆன்லைன் மூலம் நடைபெறும் தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in , என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
இ- மெயில் முகவரி: ugcnet@nta.ac.in
தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.