2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) தேர்வுத் தேதிகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது.
2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வு மே மாதம்நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கரோனா பரவலால் கடந்த 2020 டிசம்பர், 2021 ஜூன் மாதங்களில் நெட் தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து, 2 வாய்ப்பையும் சேர்த்து ஒரேகட்டமாக நெட் தேர்வை நடத்த தேசியத் தேர்வுகள் முகமை முடிவு செய்தது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்றது. அதையடுத்து நெட் தேர்வுகள் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 239 நகரங்களில் 837 தேர்வு மையங்களில் நெட் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகின.
இந்நிலையில், 2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட் தேர்வு) ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. 2021 டிசம்பர் தேர்வுகள் 08, 09, 11, 12 ஜூலை 2022 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. 2022 ஜூன் தேர்வுகள் ஆகஸ்ட் 12, 13, 14 ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற உள்ளன. இதுகுறித்த விவரம் பின்னர் விரைவில் வெளியிடப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
முன்னதாகக் கடந்த மே 30ஆம் தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு முடிவடைந்தது. மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
தேர்வர்கள் இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in
இதையும் வாசிக்கலாம்: CUET 2022 Mock Test: க்யூட் நுழைவுத் தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிட்ட என்டிஏ; பெறுவது எப்படி?
*
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்