புதிய முறையின்படி மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டு கால அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.


யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் இன்று (வியாழக்கிழமை) நடந்தது. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் நடந்த கருத்தரங்கை யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தொடங்கிவைத்தார்.


முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை


கூட்டத்தில் படிப்பை முடிக்க ஆகும் கால அளவு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. யுஜிசி கூட்டத்தில், மாணவர்கள் 3 ஆண்டு இளங்கலை அல்லது 4 ஆண்டு தொழிற் பட்டப் படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கு ஒப்புதல் பெறப்பட்டது.


அதேபோல், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் கூடுதல் காலஅவகாசம் எடுத்துக்கொள்ளும் முறைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


புதிய முறை சொல்வது என்ன?


இதன்படி, மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டு கால அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம்.


கூடுதல் அவகாசமும் எடுத்துக்கொள்ளலாம்


அதேபோல் படிப்பில் சற்று பின்தங்கிய மாணவர்கள், வழக்கமாக ஆகும் கால அளவோடு கூடுதலாக 6 மாதங்கள் அல்லது ஓராண்டு எடுத்துக்கொள்ளலாம். இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.


சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தலைமையிலான குழு முன்னதாகவே இதுகுறித்துப் பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு கூறாக இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டு உள்ளது.