Biannual Admission: இனி ஆண்டுக்கு 2 முறை கல்லூரியில் சேரலாம்; யுஜிசி அதிரடி அறிவிப்பு - முழு விவரம்!

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கல்வி ஆண்டு தொடங்கி, மே அல்லது ஜூன் மாதத்தில் முடிவடையும்.

Continues below advertisement

இனி மாணவர்கள் ஆண்டுக்கு 2 முறை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேரலாம் என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் அறிவித்துள்ளார். 2024- 25ஆம் கல்வி ஆண்டில் இருந்து இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன்படி ஜனவரி / பிப்ரவரி அல்லது ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் ஒரு மாணவர் உயர் கல்வியில் சேர முடியும்.  

Continues below advertisement

ஆண்டுதோறும் மாணவர்களின் நலனை முன்னிறுத்தி யுஜிசி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளதாக, யுஜிசி தலைவர் மாமிதலா ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

’’தற்போது ஆண்டுதோறும் வழக்கமான படிப்புக்கு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களுக்கான இந்த நடைமுறையை கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அனுமதிக்கின்றன. இதன்படி ஒவ்வோர் ஆண்டும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கல்வி ஆண்டு தொடங்கி, மே அல்லது ஜூன் மாதத்தில் முடிவடையும். கடந்த ஆண்டு திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி முறை மாணவர் சேர்க்கைக்கு ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்களில் 2 முறை சேர்க்கை நடைபெற்றது. இதனால் சுமார் 5 லட்சம் மாணவர்களுக்கு ஓராண்டுக்காகக் காத்திருக்காமல், பட்டப் படிப்புகளில் சேர்ந்தனர்.

இடையில் சேர்ந்த 4.28 லட்சம் மாணவர்கள்

யுஜிசி தளத் தகவலின்படி, ஜூலை 2022ஆம் ஆண்டில் 19,73,056 மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்தனர். தொடர்ந்து ஜனவரி 2023ஆம் ஆண்டில் 4,28,854 பேர் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளில் சேர்ந்தனர்.

மாணவர்கள் மத்தியில் இந்தப் படிப்புகளுக்கு பெரும் வரவேற்பும் ஆர்வமும் இருந்ததை உணர முடிந்தது. இதை அடுத்து, வழக்கமான கல்வி முறையிலும் ஆண்டுக்கு 2 முறை, மாணவர் சேர்க்கையை நடத்த யுஜிசி முடிவு செய்தது.

இரண்டு முறை மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம்

இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் வழக்கமான கல்வி முறையில் (regular physical mode), இந்தியாவில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் இரண்டு முறை மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி / பிப்ரவரி மாதங்களில் அல்லது ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. எனினும் இது கட்டாயமில்லை. போதிய அளவிலான உள் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களைக் கொண்ட கல்வி நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளில் தாமதம், உடல்நலனில் பிரச்சினை அல்லது சொந்தக் காரணங்களில் முதல் முறையில் கல்லூரியில் சேர முடியாத மாணவர்கள், இரண்டாவது முறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 2 முறை மாணவர் சேர்க்கையைப் போலவே, நிறுவனங்களும் ஆண்டுக்கு 2 முறை வளாக நேர்காணலை நடத்தலாம்’’.

இவ்வாறு யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola