பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியான நிலையில், தருமபரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் மாநில அளவில் சாதித்து மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளனர்.


பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். இதில் அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாணவி மகாலட்சுமி முதலிடம் பெற்றுள்ளார். தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி 200 மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 579 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.  தருமபுரி அரசு மாதிரி பள்ளியில் கல்வி பயின்று சென்னையில் பயிற்சி பெற்றுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களின் இட ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்ற மாணவி மகாலட்சுமி, பெற்றோர் சீனிவாசன் மற்றும் உறவினர்கள் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சிகளை பரிமாறி கொண்டனர். 




மேலும், மாணவி மகாலட்சுமி மருத்துவம் படிப்பதைத் தனது கனவாக வைத்து வந்துள்ளார். தற்பொழுது மருத்துவ கலந்தாய்வுக்காக காத்திருந்து வருகிறார். மேலும் நல்ல மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை நல்ல மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால், அரசு இட ஒதுக்கீட்டின்படி பொறியியல் படிப்பில் சிறந்த துறையை தேர்ந்தெடுத்து பொறியில் படிப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் தனது படிப்பிற்கு உதவிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார்.


மாநில அளவில் 2ஆம் இடம்


மேலும், பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில், மாநில அளவில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த ஜடையம்பட்டியை சேரந்த மாணவி ஹரினிகாஶ்ரீ 200 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.  இவர் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 597 மதிப்பெண்களை பெற்றிருந்தார். மேலும் பொறியியல் கல்லூரி மாணவிகளின் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிவிக்கு பெற்றோர் மோகன்-திலகம்  இனிப்பு ஊட்டி மகிழ்ச்சிகளை பரிமாறி கொண்டனர். 




மேலும், பள்ளிகள் அளவில் 12 ஆம் வகுப்பில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடம் பெற்றுள்ள நிலையில், தற்பொழுது பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலில், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனக்கு ஊக்கம் அளித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினார். மேலும், மாணவி கூறுகையில், ”இதன் மூலம் தருமபுரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தது, பெரும் மகிழ்ச்சி தருகிறது. இதுபோல வருங்காலத்தில் படிக்கின்ற மாணவர்கள், மாவட்டத்திற்கும் தங்களது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என மாணவி ஹரினிகா ஶ்ரீ  தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.