தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றித் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு:

2024-25-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது, 28.03.2025 முதல் 15.04.2025 வரை நடைபெறவுள்ளது. இப்பொதுத் தேர்விற்கான செய்முறைத்தேர்வுகள் 22.02.2025 முதல் 28.02.2025 வரை நடைபெற்று முடிந்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 12,487 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 4,46,471 பேர் மற்றும் மாணவிகள் 4,40,499  பேர் என மொத்தமாக 8,86,970 தேர்வர்களும், தனித்தேர்வர்கள் 25,841 பேரும் மற்றும் சிறைவாசித் தேர்வர்கள் 273  பேரும் என மொத்தமாக 9,13,084 தேர்வர்கள் 4,113 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். 

ஏற்பாடுகள்:

இத்தேர்வு பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்று சுமார் 48,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் 15,729 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்கு, சொல்வதை தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற எழுதுபவர், சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.  பொதுத்தேர்வுகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டத்திற்கு சென்று, தேர்விற்கு முந்தைய ஏற்பாடுகள் அனைத்தையும் பார்வையிட்டு உறுதி செய்துள்ளனர்.

விஜய் வாழ்த்து:

இந்நிலையில், தமிழக வெற்றிக கழகத்தின்  தலைவர் விஜய் , 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்து பதிவில் , “ எனது அன்புத் தம்பிகளுக்கு தங்கைகளுக்கு , எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உற்சாகத்தோடும்;துணிவுடனும்;தன்னம்பிக்கையுடனும்; பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்; வெற்றி நிச்சயம் என விஜய் தெரிவித்துள்ளார்.