பள்ளி மாணவ, மாணவியர் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுகின்றனர். அதைப் போலவே, தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2022-ம் ஆண்டு முதல் இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.
மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத் தொகை
இந்த தேர்வில் பள்ளிக் கல்வித் துறை மூலம் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை தரப்படும். இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு எப்போது?
2024ஆம் ஆண்டுக்கான தேர்வு அக்டோபர் 19-ம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாடத்திட்டம்
தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான தமிழ் பாடத்திட்ட அடிப்படையில் கேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும். கொள்குறி வகையில் கேள்விகள் அமைந்திருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
* இந்த தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற தேர்வுத்துறை இணையதள பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
* அல்லது https://tnegadge.s3.amazonaws.com/notification/TTSE/1725518833.pdf என்ற பக்கத்தை நேரடியாகவே க்ளிக் செய்து கொள்ளலாம்.
* அதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
* மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்களை 19.09.2024 வரை பதிவிறக்கம் செய்யலாம்.
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 19ஆம் தேதி கடைசி நாள் என்று அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.