மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1,500 வழங்கும் தமிழ் மொழி திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.
பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம், சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு அதிக அளவில் தயாராகி, பங்கு பெறும் நிலையில், அதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு தெரிவித்தது.
கடந்த ஆண்டு முதல் தேர்வு
இதைத் தொடர்ந்து முதன்முதலாக 2022- 2023ஆம் கல்வியாண்டில் அக்டோபர் 15ஆம் தேதி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டது. 2.67 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில், அதில் இருந்து 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2023- 2024-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.
பாடத்திட்டம் எப்படி?
தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகைத் கேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும். 2023- 2024-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் சிபிஎஸ்இ, ICSE உட்பட பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வு 15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளார். அதன்படி, முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு விண்ணப்பிப்பது குறித்த உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.
அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்க ஊக்குவிப்பு
தேர்வு தொடர்பான அறிவிப்பை மாணவர்கள் அறியும்வண்ணம் அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்குமாறு தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இதுகுறித்து உள்ளூர் நாளிதழ்களில் பொது மக்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வண்ணம் செய்தியாக வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.