பள்ளிக் கல்வியில் கட்டண வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய தமிழக அரசும் , தனியார் பள்ளிக் கல்வி இயக்குனரகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக தொகைகள் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக, பொருளாதார ரீதியாக பின்தங்கி RTE (Right to Education) திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம்கூட புத்தகங்கள், நோட்டுகள், சிறப்பு கட்டணம், பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கூடுதல் தொகைகள் பெறப்படுவதாக கூறப்படுவது மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாகும்.
கல்வி வணிகமாக மாறக்கூடாது..
கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை. அது வணிகமாக மாறக்கூடாது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எந்தவித சுரண்டலுக்கும் உள்ளாகாமல் இருப்பதை உறுதி செய்வது தமிழக அரசின் கடமையாகும்.
எனவே, தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிக் கல்வி இயக்குனரகம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கும் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை பொதுவெளியில் தெளிவாக வெளியிட வேண்டும்.
பள்ளி வளாகத்தின் முக்கிய இடங்களில் மற்றும் பள்ளியின் இணையதளங்களில் கல்விக் கட்டண விவரங்களை கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டும்.
மறைமுக கட்டணங்கள் வசூல் கூடாது
RTE திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களிடமிருந்து எந்தவித மறைமுக கட்டணங்களும் வசூலிக்கப்படாததை உறுதி செய்ய தனி கண்காணிப்பு அமைப்பு உருவாக்க வேண்டும்.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் தொகைகள் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் அளிக்கும் புகார்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க தனியார் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் சிறப்பு புகார் தீர்வு மையம் அமைக்க வேண்டும்.
வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு
பள்ளிகளின் கட்டண நிர்ணய முறையில் முழுமையான வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வு கொண்ட நடைமுறைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.
மாணவர்களின் கல்வி உரிமையையும், பெற்றோர்களின் பொருளாதார நலனையும் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கல்வி சேவையாக இருக்க வேண்டும்; வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படக்கூடாது என்பதே சமூகத்தின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு’’ என்று ஸ்ரீகாந்தி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
