பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 5 அசத்தல் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசினார்.


இணையவழி சேவைகள் தொடக்கம், கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, 5 திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 


1. மாணவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள்‌


தமிழ்‌ வழியில்‌ படித்ததற்கான சான்று  (Person Studied in Tamil Medium- PSTM)‌, கல்வி இணைச்சான்று (Equivalence Certificate), புலப்பெயர்வு சான்று (Migration Certificate) போன்ற 25 வகையான சான்றிதழ்களை நேரடியாக மாணவர்கள்‌ சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களை/ பள்ளிகளை அணுகி பெற்று வந்த நிலைக்கு மாற்றாக தமிழ்நாடு அரசின்‌ பொது சேவை மையங்கள்‌ வாயிலாக எங்கிருந்து வேண்டுமானாலும்‌ பெறும்‌ நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 


படிப்படியாக அனைத்து சேவைகளும்‌ ஜூன்‌ 2022க்குள்‌ இணைய வழியில்‌ பொது சேவை மையங்கள்‌ வாயிலாக வழங்கப்படும்‌.


2. மின்பதிவேடுகள்‌ (eRegisters)


ஆசிரியர்களின்‌ நிர்வாகப் பணியை சூறைப்பதற்காக தற்போது நடைமுறையில்‌ இருக்கும்‌ 100க்கும்‌ மேற்பட்ட பதிவேடுகளை கணினிமயமாக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இப்பணியின்‌ தொடக்கமாக 30 பதிவேடுகள்‌ மின்மயமாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்குக்‌ கொண்டு வரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள்‌ இப்பதிவேடுகளை 2022-23ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ நேரடியாக (physical copy) பராமரிக்கத்‌ தேவையில்லை. மின்பதிவேடுகளாக வைத்திருந்தால்‌ மட்டும்‌ போதுமானது. 


இதனால்‌ ஆசிரியர்கள்‌ தம்‌ கற்றல்‌, கற்பித்தல்‌ செயல்பாடுகளில்‌ கூடுதல்‌ கவனம்‌ செலுத்த இயலும்‌. படிப்படியாக ஜூன்‌ 2022க்குள்‌ பிற அனைத்து பதிவேடுகளும்‌ மின்பதிவேடுகளாக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும்‌.


3. இணைய வழியில்‌ பணிப்பலன்களைப்‌ பெறுவதற்கான செயலி


ஆசிரியர்கள்‌ தற்செயல்‌ விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு என தங்களது பணிசார்ந்த தேவைகளை எழுத்துப்பூர்வமாக தங்கள்‌ உயர்‌ அலுவலர்களிடம்‌ நேரடியாகச்‌ சென்று விண்ணப்பித்து பயனடைந்து வருகின்றனர்‌. இம்முறையில்‌ ஏற்படுகின்ற சிரமங்களைக்‌ களையும்‌ வண்ணம்‌ அவர்தம்‌ கைபேசி வாயிலாக விண்ணப்பிக்க செயலி ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்குக்‌ கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால்‌ 3 லட்சத்திற்கும்‌ அதிகமான ஆசிரியர்கள்‌ பயன்‌ பெறுவர்‌.




4. 2022- 23ஆம்‌ கல்வியாண்டிற்கான நாட்‌காட்டி


ஒவ்வொரு கல்வியாண்டும்‌ பள்ளி தொடங்கவிருக்கும்‌ நாள்‌, செயல்படும்‌ நாட்கள்‌, தேர்வு, விடுமுறை தினங்கள்‌ என அனைத்துத்‌ தகவல்களையும்‌ கொண்ட கால அட்டவணை பெற்றோர்‌, மாணவர்‌, ஆசிரியர்களின்‌ நலனுக்கென வெளியிடப்பட்டுள்ளது.


5. 2022- 23ஆம்‌ கல்வியாண்டிற்கான ஆசிரியர்‌ திறன்‌ மேம்பாட்டுத்திட்ட நாட்காட்டி


அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ 3 லட்சத்திற்கும்‌ அதிகமான ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும்‌ பயிற்சிகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன. 2022-23ஆம்‌ கல்வியாண்டில்‌ பல்வேறு வகையான ஆசிரியர்களும்‌ மாதந்தோறும்‌ பெறவேண்டிய அடிப்படை, திட்டம்‌ சார்ந்த, தன் விருப்பப்‌ பயிற்சிகளுக்கென கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால்‌ ஆசிரியர்கள்‌ தங்களது பயிற்சி குறித்து, தெளிவாகத்‌ தெரிந்து அதன்‌ பயனை முழுமையாகப் பெறும்‌ வாய்ப்பு ஏற்படும்‌.


இதுகுறித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இணைய வழியில்‌ பணிப்பலன்களைப்‌ பெறுவதற்கான செயலி மற்றும் ஆசிரியர்‌ திறன்‌ மேம்பாட்டுத்திட்ட நாட்காட்டி ஆகிய இரண்டு திட்டங்களும் இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.