அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் பணியில் சேர நடத்தப்படுவதாக இருந்த மாநில தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த தேர்வு தொழில்நுட்பக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நெல்லை  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


செட் தேர்வு


பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர நாடு முழுவதும் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக இந்தத் தேர்வை நடத்துகின்றன. ஆண்டுதோறும் 2 முறை யுஜிசியால் சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test) நடத்தப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை செட் என்ற பெயரில் மாநில அரசு சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு (SET - TAMILNADU STATE LEVEL ELIGIBILITY TEST) நடத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஏப். 1ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இதற்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பித்தனர். நாளை முதல் இரு நாட்களுக்கு அதாவது ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், செட் தேர்வு 3 மணி நேரத்துக்கு நடைபெறுவதாக இருந்தது. 


தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு


இந்த நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், ’’ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த SET நுழைவுத் தேர்வு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.


உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைத்துத் தேர்வர்களும் முதுகலை படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் / மூன்றாம் பாலினத்தவர்கள் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 58 வயது வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 


கூடுதல் தகவல்களுக்கு: https://msutnset.com/


சந்தேகங்களுக்கு தொலைபேசி எண்: +91 462-2333741


இ- மெயில் முகவரி : msuset2024@msuniv.ac.in