பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் ஜூலை 28ஆம் தேதி பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தின் முன்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


திமுக 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும் முன், தனது தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிட்தது. எனினும் நிதி நிலை காரணமாக இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில், திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதை முன்னிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி, பலனளிக்காத நிலையில் போராட்டத்தையும் அறிவித்துள்ளன.


10 அம்சக் கோரிக்கைகள் என்னென்ன?


தமிழக அரசே! ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துக.


2. (அ) ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் வழங்கிடுக.


(ஆ) உயர் கல்வித் தகுதிக்கு பேரறிஞர் அண்ணா வழங்கிய ஊக்க ஊதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துக.


(இ) அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும், தொகுப்பூதிய ஆசிரியர்களையும் முழுநேர ஆசிரியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்கிடுக.


3. தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நாள் 16.11.2012. ஆகவே அத்தேதிக்கு முன்னர் பணியில் அமர்த்தப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளித்திடுக.


4. பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அவர்களது பணிக்காலத்தை (Seniority) மட்டுமே தேவையான தகுதியாகக் கொள்ள வேண்டுமே தவிர ஆசிரிய தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறவேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு முழுமையாக நிராகரித்து, அதற்குத் தேவையான சட்ட விதிமுறைகளை உருவாக்கிட வேண்டும்.


(ஆ) பள்ளிக் கல்வித்துறையில் ஏராளமான விபரங்களையும், புள்ளி விவரங்களையும் EMIS ல் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யவேண்டியிருப்பதால் - அவை ஆசிரியர்களின் கற்பித்தல் பணியையும், மாணவர்களின் கற்றல் பணியையும் மிகக் கடுமையாக பாதித்து வருகின்றன. ஆகவே EMIS பணிகளை மேற்கொள்ள தனியாக பணியாளர்களை நியமித்து, பள்ளிகளில் கற்பித்தல், கற்றல் பணிகள் தங்குதடையின்றி நடைபெற்றிட 'கல்வித்துறையே ஆவன செய்திடுக.


5. (அ) பள்ளிக்கல்வித் துறையில் அரசு/ உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிடுக. 
(ஆ) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் தனைத்து சலுகைகளையும் அரசு நிதி உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிடுக.


6. சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சு வழங்கிய தீர்ப்பின் அடிப்ப யில், காலியாக இருக்கும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்பிடுக.


7. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை உருவாக்கிடுக.


8. (அ) 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் பணி நியமன நாளில் இருந்து பணிவரன்முறை செய்திடுக. 
ஆ) ஆசிரியர் - அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களையும், இதரப் படிகளையும் மாற்றி உயர்த்தி அமைக்க, ஊதியக் குழுவை மத்திய மாநில அரசுகளே உடனடியாக அமைத்திடுக.


9. (அ) தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்விக்கென்று தனியாக ஒரு இயக்குநரகத்தை அமைத்திடுக.


10. ஒவ்வொரு ஆண்டும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு 100 வேளாண் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறப்பித்த அரசாணையை அமல்படுத்துக. அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட ஆவன செய்க. அதுவரை அவர்களுக்கு சிறப்பூதியம் வழங்கிடுக.


இவ்வாறு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.