ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தால் போட்டித் தேர்வு காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்படும் என்று தேர்வர்கள் சிலர் கூறி வந்த நிலையில், அதற்கு டிஎன்பிஎஸ்சி பதில் அளித்துள்ளது.

Continues below advertisement

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நடத்தி தேர்வு செய்து வருகிறது. 

இந்த நிலையில் குரூப் 1, 2, குரூப் 4, குரூப் 5 என பல்வேறு போட்டித் தேர்வுகள் வெவ்வேறு கால இடைவெளிகளில் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கை வெளியிடப்படும்போது பொதுவாக அறிவிக்கப்படும். எனினும் அதற்குப் பிறகோ, தேர்வு முடிவுகள் வெளியான பிறகோ காலி இடங்களின் எண்ணிக்கை உயர்த்தி அறிவிக்கப்படும்.

Continues below advertisement

இந்த நிலையில், ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தால் போட்டித் தேர்வு காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்படும் என்று தேர்வர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கூறி வந்தனர். இந்த நிலையில் இதற்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் பக்கத்தில் கூறி உள்ளதாவது:

’’Fact Check

'X’ (formerly ட்விட்டர்)! தளத்தில்‌ ட்ரெண்டிங்‌ (trending) செய்தால்‌, தேர்வாணையம்‌ காலிப்‌ பணியிடங்களின்‌ எண்ணிக்கையை அதிகரிக்கும்‌ என சிலர்‌ சமூக வலைத்தளங்களில்‌ தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்‌.

உண்மை என்ன?

இது தவறான தகவல்‌.

தேர்வாணையம்‌ தேர்வர்களின்‌ நலன்‌ கருதி, ஒவ்வொரு அறிவிக்கையிலும்‌, அறிவிக்கப்பட்ட காலிப்‌ பணியிடங்களின்‌ எண்ணிக்கையில்‌, தேர்வு முடிவுகள்‌ வெளியிடுவதற்கு முன்பு, கூடுதல்‌ காலிப் பணியிடங்களை சேர்த்து அறிவித்து வருகிறது.

எக்ஸ் தளத்தில்‌ ட்ரெண்டிங்‌ செய்வதற்கும்‌, காலிப்‌ பணியிடங்கள்‌ எண்ணிக்கை உயர்விற்கும்‌ எந்த தொடர்பும்‌ இல்லை.

தவறான தகவலை பரப்பாதீர்‌!’’ என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.