குரூப் 1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் எதுவும் தற்போது செய்யப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மாநிலம் முழுவதும் அரசுத் துறைகளில் உள்ள காலி இடங்களை நிரப்பி வருகிறது. போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த நிலையில், இந்தத் தேர்வுகள் குரூப் 1, 2, 3, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கு பல விதமாக நடத்தப்படுகின்றன. இவற்றுக்காக நடத்தப்படும் தேர்வுகளின் பாடத் திட்டங்களை டிஎன்பிஎஸ்சியே தயார் செய்து வெளியிடுகிறது.
யூபிஎஸ்சி தேர்வுக்கு இணையாக பாடத்திட்டம் மாற்றம்
இந்த நிலையில், யூபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு இணையாக டிஎன்பிஎஸ்சி (TNPSC)-க்கு சில பாடத்திட்டங்களை வடிவமைப்பது குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலர் ஆரோக்கிய ராஜ் தெரிவித்து இருந்தார்.
தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசின் பணிகளுக்காக யூபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்து தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்து இருந்தது.
டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டம் மாற்றமா?
இதனால் டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டம் மாற்றப்படுவதாக செய்தி வெளியாகி, பிறகு வைரலானது. எனினும் இதற்கு, டிஎன்பிஎஸ்சி செயலர் ஆரோக்கிய ராஜ் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், ’’வதந்திகளை நம்பாதீர்கள்.
2025ஆம் ஆண்டின் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள், டிசம்பர் 2024-ல் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பாடத் திட்ட மாற்றம் குறித்த பரபரப்பு செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மாறும் காலத்துக்கு ஏற்ப பாடத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, மாற்றப்பட்டாலும், அது குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சியே தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.