டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை 92 வேலை நாட்களில் வெளியிட்டு அசத்தி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி அன்று தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.


இத்தேர்விற்கு 20,36,774 விண்ணப்பதாரர்கள்‌ தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்‌. தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து ஜூன் 18ஆம் தேதி தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியாகின.


சொன்னதைச் செய்த டிஎன்பிஎஸ்சி


இந்தத் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 2025 ஜனவரி மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையில் தெரிவித்தது. இது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில், அக்டோபர் மாதத்திலேயே தேர்வு முடிவுகள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து, குழப்பத்தைத் தீர்த்து வைத்தது.


அக்டோபர் மாதம் முடிய இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று (அக்.28) வெளியிடப்பட்டன. தேர்வர்கள்‌ தங்களது தரவரிசை மற்றும்‌ மதிப்பெண்களை தேர்வாணையத்தின்‌ இணைய தளங்களான www.tnpscresults.tn.gov.in மற்றும்‌ www.tnpscexams.in ஆகிய இணைய தளங்களில், தங்களின் பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்‌.


விடைத் தாள்களின் இரு பாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து, பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் 4 மாதங்களில், 92 வேலை நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


8 மாதங்கள் ஆன 2023 குரூப் 4 தேர்வு முடிவுகள்


குரூப் 4 தேர்வுகளுக்காக 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்வு, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. சரியாக 8 மாதங்கள் ஆன நிலையில் 2024ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.


இந்த நிலையில் அதில் சரிபாதிக்கும் குறைவான நாட்களில் இம்முறை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக 2024ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகளும் அதே ஆண்டில் வெளியிடப்பட்டு விட்டன. 


பணியிடங்களின் எண்ணிக்கையும் உயர்வு


போதாதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையும் 9491 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதால், தேர்வர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.