டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இறுதி விடைக் குறிப்புகள் பெரும்பாலும் வெளியிடப்படுவதில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்துத் தெரிவித்து இருந்த நிலையில், நடத்திய பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டு விட்டதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.


பின்னணி என்ன?


குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவை வெளியிடத் தடை கோரிய வழக்கு நேற்று (ஆக.21) விசாரணைக்கு வந்தது. அதேபோல மொழிபெயர்ப்பில் தவறுதலாக இருந்த 6 கேள்விகளுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கக் கோரியும் வழக்கு தொடரப் பட்டிருந்தது.


இதை விசாரித்த நீதிபதிகள், ''டிஎன்பிஎஸ்சி நடத்தும் பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக் குறிப்புகள் வெளியாவதில்லை. நீதித் துறை தேர்வுகளுக்கும் அதே நிலைதான் நிலவுகிறது'' என்ற கருத்தைத் தெரிவித்து இருந்தனர்.


டிஎன்பிஎஸ்சி தலைவரிடம் உரிய விளக்கம் பெற உத்தரவு


தொடர்ந்து, வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவரிடம் உரிய விளக்கம் பெற்று அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


இந்த நிலையில், ஆணையம் நடத்திய பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டு விட்டதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக 11 தேர்வுகளில் 10 தேர்வுகளுக்கு விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






பெரும்பாலான தேர்வுகளுக்கு வெளியீடு


இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிஎன்பிஎஸ்சி, . 2023ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையின்படி, 11 வகையான தேர்வுகளுக்கு ஆட்சேர்ப்பு நடந்து முடிந்துள்ளது. இதில் 10 கொள்குறி வகை தேர்வுகளுக்கு இறுதி விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டு விட்டன. இது ஒப்பீட்டளவில், 91 சதவீதம் ஆகும். இவை அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.