டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் இன்று (ஆக.23) பொறுப்பேற்றார்.


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இதில் தலைவர் பணியிடம் காலியாக, நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்தது. அண்மையில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது தலைவரும் நியமிக்கப்பட்டு உள்ளார்.


இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் இன்று (ஆக.23) பொறுப்பேற்றார்.  






தேர்வாணையம் என்றுமே நேர்மையாகச் செயல்படும்


தொடர்ந்து பேசிய பிரபாகர், ’’டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் என்றுமே நேர்மையாகச் செயல்படும். தவறுகள் ஏதேனும் நேர்ந்து, அதை சுட்டிக் காட்டினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். வெளிப்படையாக செயல்படுவோம்.


டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் உள்ள கால தாமதத்தை குறைப்பதே எங்களின் முதல் பணி. அதேபோல தேர்வுகளை ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால அட்டவணையில் நடத்தவும் விரைவில் நடவடிக்கை எடுப்போம்’’ என்று பிரபாகர் தெரிவித்தார்.


முன்னதாக, உள்துறைச் செயலர், வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகித்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர், டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2028 வரை இப்பதவியில் இருப்பார்.


முதலமைச்சரின் செயலாளர் ஆக இருந்தவர்


1989-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக பிரபாகர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அரசின் பல்வேறு முக்கிய துறைகளின் செயலாளராக இருந்தவர். மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது முதலமைச்சரின் செயலாளர் 4 (S 4) ஆக இருந்தவர்.


1966-ம் ஆண்டு பிறந்த இவர் 2026-ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார். 62 வயதுவரை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவி இருக்கும் என்பதால் 2028-ல் பிரபாகர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.