தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வு அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்தது. அதற்கான போட்டித் தேர்வு அக்.9ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.


இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன் இதே பணிக்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி  வெளியிடவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர்.


இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ’’மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 110  பேரை தேர்ந்தெடுப்பதற்காக 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு 10.06.2018ஆம் நாள்  போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. வழக்கமாக தேர்வு நடத்தப்பட்டு இரு மாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதற்கு முழுக்க முழுக்க டி.என்.பி.எஸ்.சி அமைப்புதான் பொறுப்பேற்க வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது முதல் தேர்வு நடத்தப்பட்டது வரை ஏராளமான குழப்பங்கள் நிகழ்ந்தன. அதனால், பாதிக்கப்பட்ட தேர்வர்கள் பல வழக்குகளைத் தொடர்ந்தனர்.  அந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளன.  


’ஒவ்வொரு முறையும் ஒத்திவைக்கக் கோரும் டிஎன்பிஎஸ்சி’


அந்த வழக்குகள் ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும்போதும் விசாரணையை ஒத்திவைக்கக் கோருவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் டி.என்.பி.எஸ்.சி, வழக்கை முடிவுக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், 6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் எதிர்காலம் என்னவாகும்? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.


இந்த நிலையில் இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. அந்த பதிலில்,


Fact Check


மோட்டார்‌ வாகன ஆய்வாளர்‌ நிலை ॥ தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்‌ நிலுவையில உள்ள வழக்கில்‌ விசாரணையை தேர்வாணையம்‌ ஒத்தி வைக்கக் கோருவதாக, சமூக வலைத்தளங்களில்‌ சிலர்‌ தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்‌.


உண்மை என்ன?


இது தவறான தகவல்‌.


சென்னை உயர்‌ நீதிமன்றம்‌ நீதி பேராணை மேல் முறையீட்டு மனு எண்‌. 590/ 2023 தொகுதி வழக்குகளில்‌, தானியங்கி மோட்டார்‌ வாகன பட்டறைகளுக்கு (automobile workshops), பின்னோக்கி புதுப்பித்தல்‌ (retrospective renewal) தொடர்பாக முடிவு செய்ய போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும்‌ போக்குவரத்து துறையின்‌ முடிவின்‌ அடிப்படையில்‌ தேர்வாணையம்‌ தேர்வு முடிவுகளை வெளியிடவும்‌ உத்தரவிட்டிருந்தது.


ஆனால்‌ சென்னை உயர் நீதிமன்றத்தின்‌ மேற்கண்ட தானியங்கி மோட்டார்‌ வாகன பட்டறைகளுக்கு பின்னோக்கி புதுப்பித்தல்‌ தொடர்பாக போக்குவரத்து துறைக்கு பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம்‌ தடை விதித்துள்ளது. இந்த உச்ச நீதிமன்ற வழக்கு தொடர்பாக போக்குவரத்து துறையால்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தவறான தகவலை பரப்பாதீர்‌.


இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.