தமிழ்நாட்டுக்கான அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை, முதன்முதலாக 1930ஆம் ஆண்டில் சர் நார்மன் மஜோரி என்ற ஆங்கிலேயர் வழிநடத்தத் தொடங்கினார். சுதந்திரத்துக்குப் பிறகு திவான் பகதூர் பிள்ளை என்ற தமிழ்நாட்டுக்காரர், 1948-ல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.


ஆணையம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளை விரைவில் எட்டவுள்ள சூழ்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் தவித்து வருகிறது டிஎன்பிஎஸ்சி.


அனைத்துத் துறைகளுக்கும் ஆட்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி!


தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசுத் துறைகளின் காலி இடங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றன. கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் காலியிடங்களும் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமே நிரப்பப்படும் என்று திமுக அரசு அறிவித்தது.


தனக்கே தலைவர் இல்லாத சோகம்


பிற அரசுத் துறைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் ஓர் ஆணையம், தனக்கே தலைவர் இல்லாமல் ஒன்றரை ஆண்டுகளாகத் தத்தளித்து வருகிறது. அதேபோல ஆணையத்துக்குப் போதிய அளவில் உறுப்பினர்கள் நியமிக்கப்படாதது அடுத்த சோகம்.




டிஎன்பிஎஸ்சியின் கட்டமைப்பு என்ன?


டிஎன்பிஎஸ்சி ஆணையம் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இதில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக, நிரப்பப்படாமல் உள்ளது. அதேபோல டிஎன்பிஎஸ்சியில் தற்போது 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.


முன்னதாக 2020ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். இவர் 2022 ஜூன் 9ஆம் தேதி ஓய்வு பெற்றார். புதிய தலைவர் நியமிக்கப்படாத நிலையில், உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் ஐஏஎஸ் (ஓய்வு), பொறுப்பு தலைவராக ஜூன் 10ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆகக் குறைந்தது. 2021-ல் இருந்து பேராசிரியர் ஜோதி சிவஞானம், டாக்டர் அருள்மதி, ஆரோக்கியராஜ் ஆகிய 3 பேரும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.


இதற்கிடையே ஓராண்டுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்க திமுக அரசு முடிவு செய்தது. 1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திர பாபுகடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி அன்று ஓய்வு பெற்றார். அப்போது அவருக்கு 60 வயது. அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராகவும் உறுப்பினர்கள் 7 பேரையும் நியமிக்க திமுக அரசு முடிவு செய்து, அதற்கான கோப்பை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்தது.


 





ஆளுநர் சரமாரிக் கேள்விகள்


அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டு இருந்தார். அதேபோல தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக செய்தித் தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டதா? எனவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் ஓய்வுக்கான உச்ச வரம்பு 6 ஆண்டுகள் அல்லது 62 வயது என்ற சூழலில், 61 வயது நபரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் ஆளுநர் கேட்டதாகத் தகவல் வெளியானது.


வெளிப்படைத்தன்மை இல்லை


இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமிப்பது தொடர்பாக உரிய விளக்கங்களுடன் கூடிய கோப்புகளை தமிழக அரசு மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியது. இந்த கோப்பை ஆளுநர் நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியானது. டி.என்.பி.எஸ்.சி தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி வேறு ஒருவரை தேர்வு செய்ய ஆளுநர் பரிந்துரைத்ததாகவும் கூறப்பட்டது. 


தலைவரை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு?


டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி உள்ளிட்ட ஆணையங்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவுகள் 316 - 319 அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். யூபிஎஸ்சி தலைவர், உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கும் நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கிறார்.


வழக்கமாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பரிந்துரையை தமிழக அரசு இறுதிசெய்து, ஆளுநருக்கு அனுப்பும்.  ஆளுநர் கோப்புக்கு ஒப்புதல் அளிப்பார்.


அறிவிப்புகள் வெளியாவதில் தொடர் சுணக்கம்


இந்த நிலையில் சைலேந்திரபாபுவின் நியமனத்துக்கு ஆளுநர் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இதனால் தலைவர் பணியிடம் ஒன்றரை ஆண்டுகளாக காலியாகவே உள்ளது. இதனால் நோட்டிஃபிகேஷன் எனப்படும் ஆட்தேர்வு அறிவிப்புகள் வெளியாவதில் சுணக்கம் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.


குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், 10 மாதங்கள் ஆகியும் குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆண்டே இன்னும் சில நாட்களில் முடியும் நிலையில், 19 ஆட்தேர்வு அறிவிப்புகள் (Notifications) மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இதனால் அரசுப்பணியை நம்பியுள்ள இளைஞர்கள் அல்லலுக்கு ஆளாகி உள்ளனர்.




நேரம், ஆற்றல், பணத்தை விரயமாக்கும் இளைஞர்கள்?


கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் யாராலும் திரும்பக் கொடுக்க முடியாதது நேரம் மட்டுமே. அந்த நேரத்தில், தங்களின் ஆற்றலையும் பணத்தையும் செலவழித்து, கேளிக்கைகளை விடுத்து, அரசுப் பணியை மட்டுமே இலக்காகக் கொண்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் தேர்வுகளுக்குத் தயாராகி வருகின்றனர். அவர்கள் இந்தத் தாமதத்தால் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர்.


இதுகுறித்து கெளதம் என்னும் தேர்வர் ABP Nadu-க்குப் பேட்டியளித்தார். அவர் கூறும்போது, ’’2 ஆண்டுகளுக்கு முன்னர், 2021-ல் இருந்தே குரூப் 2 தேர்வுக்குத் தயாராகி வருகிறோம். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வுக்கு அறிவிப்பு வெளியான பிறகு, தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றோம். ஓராண்டுக்குப் பிறகு முதன்மைத் தேர்வு 2023 பிப்ரவரியில் நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியாகி, சில மாதங்களிலேயே அரசுப் பணியைப் பெற்றுவிடுவோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 2023 முடியும் சூழலில் இன்னும் முதன்மைத் தேர்வு முடிவே வெளியாகவில்லை.


இதற்குப் பிறகு நேர்காணல், கலந்தாய்வு நடைமுறைகளுக்கு எவ்வளவு தாமதமாகும் என்று தெரியவில்லை. என்னுடைய தோழர்கள் சிலர் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். இரண்டு தோழிகளுக்குத் திருமணமே ஆகிவிட்டது. ஆனால் இன்னும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. ஆமை வேகத்தில் டிஎன்பிஎஸ்சி செயல்படுவதற்கு இது சிறந்த உதாரணம். இனியாவது டிஎன்பிஎஸ்சி விரைந்து செயல்பட்டு, தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


அதிகார மோதல்களுக்கு லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை பகடைக் காயாக்காமல், டிஎன்பிஎஸ்சியை விரைந்து மறுகட்டமைப்பு செய்து, புது வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.