டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியான நிலையில், முதன்மைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு ॥ எனப்படும் குரூப் 2 மற்றும்‌ 2ஏ-ல் அடங்கிய பதவிகளின்‌ நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை 20.06.2024 அன்று தேர்வாணைய வலைதளத்தில்‌ வெளியிட்டது. இத்தெரிவிற்கான முதல்நிலை எழுத்துத்‌ தேர்வு 14.09.2024 அன்று முற்பகல்‌, 38 மாவட்ட மையங்களில்‌ நடைபெற்றது.


இத்தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட 7,93,966 தேர்வர்களில்‌ 5,83,467 தேர்வர்கள்‌ தேர்வு எழுதினர்‌. இத்தெரிவிற்கான குரூப் 2 மற்றும்‌ 2ஏ பணிகளுக்கான அறிவிக்கையில்‌ நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சாரத்தில்‌. முதன்மை எழுத்துத்‌ தேர்வுகளுக்குத்‌ தற்காலிகமாக அணுமதிக்கப்பட்ட தேர்வர்களின்‌ பதிவெண்‌ கொண்ட பட்டியல்கள்‌, தேர்வாணைய வலைதளத்தில்‌ (www.tnpscresults.tn.gov.in) நேற்று (12.12.2024 அன்று) வெளியிடபட்டன.


எவ்வளவு பேர் முதன்மைத் தேர்வு தேர்ச்சி?


இந்த நிலையில் குரூப் 2 பணிகளுக்கு மொத்தம் 534 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், முதன்மைத் தேர்வுக்கு 7,987 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ளனர். இவற்றுக்காக 21,822 பேர் முதன்மைப் பணிகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன.


முதன்மைத் தேர்வு எப்போது?


குறிப்பாக தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவை வெவ்வேறு நாட்களில் நடக்கின்றன. குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான முதல் தாள் பிப். 2ஆம் தேதி முற்பகலில் நடைபெற உள்ளது. அதேபோல குரூப் 2 தேர்வு இரண்டாம் தாள் பிப்.23ஆம் தேதி முற்பகலில் விரிந்துரைக்கும் வகையில் நடைபெற உள்ளது. அதேபோல குரூப் 2 ஏ இரண்டாம் தாள் பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்வு கொள்குறி வகையில் நடைபெற உள்ளது.


விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?


குரூப் 2 மற்றும்‌ 2ஏ பணிகளுக்கான இரண்டு முதன்மை எழுத்துத்‌ தேர்வுகளுக்கும்‌ தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள்‌ முதன்மை எழுத்துத்‌ தேர்விற்கான கட்டணம்‌ ரூ.150/- வீதம்‌ இரண்டு முதண்மை எழுத்துத்‌ தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணத்தை தங்களது ஒருமுறைப்‌ பதிவின்‌ (One Time Registration) மூலமாக மேற்படி பட்டியல்களில்‌ குறிப்பிட்டுள்ள கடைசி தேதிக்குள்‌ செலுத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


இதையும் வாசிக்கலாம்: TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?