டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான காலி இடங்கள் மற்றும் குரூப் 4 பணிகளுக்கான காலியிடங்கள் ஆகியவற்றை உயர்த்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு குறித்து ஏப்ரம் 25ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. இளநிலை உதவியாளர், எழுத்தர், டைப்பிஸ்ட், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகின்றன.
2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்வுக்கு மொத்தம் 13,89,738 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 11,48,019 பேர் தேர்வை எழுதினர். மீதமுள்ள 2,41,719 தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதவில்லை. இதனால் தேர்வை எழுதியவர்கள் விகிதம் 82.61 ஆக இருந்தது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, கலந்தாய்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்வு
இந்த நிலையில் தேர்வு முடிந்து ஆட்கள் தேர்வு செய்யப்படும் வரை, அவ்வப்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு உள்ளன. அதில் இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு தொழிலாளர் ஆய்வுகள் நிறுவனம்)- 2, ஸ்டெனோ டைப்பிஸ்ட் – பல்வேறு அரசு நிறுவனங்களில் 39 காலி இடங்கள், டைப்பிஸ்ட் – நகராட்சி நிர்வாகத்தில் 5 காலி இடங்கள், அதேபோல டைப்பிஸ்ட்- செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிபதி – 12 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன.
அதேபோல டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான காலி இடங்களின் எண்ணிக்கையும் 190 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுதிய தேர்வர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
https://tnpsc.gov.in/Document/english/Addendum_7D_2025_ENGLISH.pdf என்ற இணைய முகவரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள விவரங்கள், பணியிட வாரியாக அளிக்கப்பட்டு உள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/