நாம் ஒருவரிடம் நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் நாம் அந்த நிலம் தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்வது வழக்கம். பத்திரப்பதிவு அலுவலகங்களில் பட்டா, சிட்டா போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

Continues below advertisement

நிலம் வாங்கும்போதும், விற்கும்போது பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாம் பதியச் செல்லும்போது கேட்கப்படும் ஆவணங்களின் பெயர்களும், அதன் அர்த்தங்களும் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

பட்டா:

ஒரு நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை குறிப்பதற்காக வருவாய்த்துறை அளிக்கும் சான்றிதழ் பெயரே பட்டா.

Continues below advertisement

சிட்டா:

ஒரு நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணத்தின் பெயரே சிட்டா.

அடங்கல்:

ஒரு நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த இடத்தில் உள்ளது  என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறையின் ஆவணமே அடங்கல் ஆகும். 

கிராம நத்தம்:

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தை குறிப்பதே கிராம நத்தம் ஆகும்.

கிராம தானம்:

கிராமத்தின் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிலமே கிராம தானம் என்று குறிக்கப்படும்.

தேவதானம்:

கோயில் பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல் தேவதானம் என்று அழைக்கப்படுகிறது. 

கிரயம்:

நிலம் ஒருவருக்கு விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்தும் ஆவணமே கிரயப்பத்திரம்.

வில்லங்க சான்று:

ஒரு நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த பின்பு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பது மோசடி. அந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம் வில்லங்க சான்று.

நன்செய் நிலம் ( நஞ்சை):

அதிக பாசன வசதி கொண்ட நிலமே நன்செய் நிலம் ஆகும். 

புன்செய் நிலம் ( புஞ்சை):

மழையை நம்பி பாசன வசதி கொண்ட நிலம் புன்செய்நிலம்.

புல எண்:

நில அளவை எண் புல எண் என்று அழைக்கப்படுகிறது. 

ஒரு நிலத்தை அல்லது இடத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதியும்போது மேலே கூறிய ஆவணங்கள் அத்தியாவசியம் ஆகும். இதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் மிகப்பெரிய சிக்கலைச் சந்திக்க நேரிடும். இதன்காரணமாகவே பத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த ஆவணங்கள் கேட்கப்படுகிறது. 

மேலும், எதிர்காலத்தில் ஏதேனும் அரசு சார்பில் நிலம் தொடர்பாக  இழப்பீடு பெற வேண்டும் என்றாலும் இந்த ஆவணங்கள் இருந்தால் இழப்பீடு பெறுவதற்கு எளிதாக இருக்கும். மேலும், உங்களது நிலம் தொடர்பாக பிரச்சினைக்கு தீர்வு காணவும் இந்த ஆவணங்கள் மிகவும் பக்கபலமாக இருக்கும்.