குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியைத் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக  #WeWantGroup4Results என்னும் ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 


தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 24ஆம் தேதி நடத்தப்பட்டது. 


இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வெளியாகி இருந்தால் அதே மாதத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு, நவம்பர் மாதத்தில் அவை சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், தேர்வு முடிவுகள் தாமதமாகி வருகின்றன. 2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 


இதுகுறித்துத் தேர்வர்கள் கூறும்போது, ’’தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் மாற்றுத் திறனாளிகள், ஏழைத் தேர்வர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்காமல்  குரூப்4 தேர்வு முடிவை உடனே வெளியிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர். 




டிஎன்பிஎஸ்சி  விளக்கம் 


எனினும் இதுகுறித்துக் கடந்த மாதத்தில்  விளக்கம் அளித்த டிஎன்பிஎஸ்சி, விடைத் தாள்களின் இரு பகுதிகளையும் தனித்தனியே இரு முறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் விடைத்தாட்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளங்காணப்பட்டு அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது. விடைத்தாட்களில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி, தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது.


கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றனர்.  இம்முறை விடைத்தாட்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து, பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதன்படி மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய OMR விடைத்தாட்களின் எண்ணிக்கை 35 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளமை கடந்த தேர்வுகளை ஒப்பிடும்போது, ஏறக்குறைய மும்மடங்கு கூடுதலான வேலையை உள்ளடக்கியதாக உள்ளது.


மேற்கண்ட காரணங்களினாலும், இதே காலத்தில் தேர்வாணையம் பல்வேறு பணித்தேர்வுகளையும் மற்றும் துறைத்தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டுவருவதாலும், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடையறாது பணியாற்றி இத்தேர்வின் அனைத்து மிக முக்கிய பணிகளையும் மிகுந்த கவனத்துடன் முடித்து, எவ்வித தவறுக்கும் இடம்தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தது.


இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகாதது குறித்து தேர்வர்கள் வேதனை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.