டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


இதற்கிடையே குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. தற்போது வனக் காப்பாளர், வனக் கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.


2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு, மாநிலம் முழுவதும் ஜூன் 9ஆம் தேதி 7,247 தேர்வு மையங்களில் நடைபெற்றது. தேர்வுக்கு சுமார் 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 17 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர். சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.


8,932 ஆக உயர்வு


இதற்கிடையே குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் முதலில், 6,224  ஆக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணியிடங்கள் பிறகு 8,932 ஆக உயர்த்தப்பட்டன. அதேபோல குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் விடைக் குறிப்புகள் ஜூன் 18ஆம் தேதி வெளியாகின. தொடர்ந்து தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்தது.


ஜனவரி மாதம் தேர்வு முடிவுகள்?


அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 2025 ஜனவரி மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில், அக்டோபர் மாதத்திலேயே தேர்வு முடிவுகள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து, குழப்பத்தைத் தீர்த்து வைத்தது.


தற்போது அக்டோபர் மாதம் முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் தெரிவித்துள்ளார்.


தேர்வு முடிவுகளில் தாமதம் ஏன்?


இதுகுறித்து ஏபிபி நாடுவிடம் அவர் கூறும்போது, ’’இப்போது டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். குரூப் 4 தேர்வு தாள்களைத் திருத்தும் பணி மிகவும் பெரியது என்பதால் சற்றே தாமதமாகிறது.


இந்த மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவித்து இருந்தோம். அந்த வகையில் விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும்’’ என்று தெரிவித்தார்.