டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை 3 மாதங்களில் வெளியிடுவோம் என்று அதன் தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்று வரும் நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
’’குரூப் 4 தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதுகின்றனர். சென்னையில் 312 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
200 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் தேர்வு
இந்தத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு, கொள்குறி வகையில் நடைபெறுகிறது. தமிழ் பாடத்துக்கு 100 மதிப்பெண்கள், பொது அறிவு மற்றும் மனத்திறன் சோதனைக்கு 100 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கு தேர்வு ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 25 வகையான பதவிகள் இதன்மூலம் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு முடிவுகள் எப்போது?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை 3 மாதங்களில் வெளியிடுவோம் என்று கருதுகிறோம். கடந்த ஆண்டு 4 – 4.5 மாதங்கள் ஆகின. இந்த முறை பல நடவடிக்கைகள் மூலம் 3 மாதத்துக்குள்ளாக தேர்வு முடிவுகள் வெளியாகலாம். முன்பாகவே வெளியாகவும் வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு 10,701 பேர் அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 11,027 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 4,300 பேர் அடுத்த 2 மாதங்களில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் தேர்வர்களை அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
மதிப்பீட்டு ஆய்வகம் மூலம், கணினியைக் கொண்டு குரூப் 4 வினாத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. நம்மிடம் 6 மதிப்பீட்டு ஆய்வகங்கள் உள்ளன.
காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்
15 நாட்களுக்கு உள்ளாக தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்படும். நிபுணர் குழு மூலம் அவை சரிபார்க்கப்பட்டு, இறுதி விடைக் குறிப்பு வெளியாகும். 1 மாதத்தில் வினாத்தாள்கள் திருத்தம் செய்யப்படும். பின்னர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு 3 மாதத்துக்கு உள்ளாக தேர்வு முடிவுகள் வெளியாகும்.
கடந்த காலங்களில் 2 ஆண்டுக்கு ஒரு முறையே குரூப் 4 தேர்வு நடைபெற்று வந்ததால், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இப்போது ஓராண்டுக்கு ஒருமுறை தேர்வு நடைபெறுகிறது என்பதால், காலி இடங்கள் குறைந்திருக்கலாம். எனினும் தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காலியிடங்களின் எண்ணிக்கை, பல்வேறு துறைகளிடம் கோரப்படும் என்பதால், காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்’’.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.