டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், உடற்தகுதிச் சான்றிதழ் மற்றும் பிழையான சான்றிதழ் பதிவேற்றம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் கணக்கு தொடங்கப்பட்டது. இதில் குரூப் 1, 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் அறிவிக்கைகள், தேர்வு தேதிகள், பிற தேர்வுகள் விவரம், தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு குறித்த பல்வேறு அப்டேட்டுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகின்றன.
குரூப் 4 அப்டேட்
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 28ஆம் தேதி அன்று வெளியாகின. குரூப் 4 தேர்வு எழுத 20,37,101 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில், 20,36,774 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், 4,45,345 பேர் தேர்வை எழுதவில்லை.
தேர்வை 15,91,429 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களில் அதி விரைவாக வெளியிடப்பட்டன. நேற்று அதாவது அக்டோபர் 28ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்துள்ளது.
உடற்தகுதி சான்றிதழ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், உடற்தகுதிச் சான்றிதழ் மற்றும் பிழையான சான்றிதழ் பதிவேற்றம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
இதன்படி, குரூப் 4 தேர்வு அறிவிக்கை தேதிக்கு முன்பு பெற்ற உடற்தகுதி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.
சான்றிதழ் ஏற்கப்படாது
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தட்டச்சு / சுருக்கெழுத்து சான்றிதழில் தேர்வு முடிவுகள் வெளியிட்ட தேதி அறிவிக்கை தேதிக்குப் பின்னால் இருப்பின் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.