தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகளை ஜூலை 24ஆம் தேதி நடத்துகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (ஏப்ரல் 28) கடைசித் தேதி ஆகும்.


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய தமிழ்நாடு அரசின் குரூப் 4 பணிகளில் மொத்தம் 7,382 காலி இடங்கள் உள்ளன. இதில் 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தப் பதவிகளுக்கு அதிகபட்சமாக 
ரூ.75 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும்.


தேர்வு முறை எப்படி?


மொத்தம் 200 கேள்விகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.


முதல் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் பெற்றவர்களின் தேர்வுத்தாள் மட்டுமே திருத்தப்படும். மொத்தம் 90 மதிப்பெண்களைக் குறைந்தபட்சமாகத் தேர்வர்கள் பெற வேண்டும். அவர்களின் பெயர்கள் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும். 


விண்ணப்பிப்பது எப்படி?


விண்ணப்பதாரர்கள் நிரந்தப் பதிவு செய்து அதற்கான கட்டணத்தைச் செலுத்தி இருக்க வேண்டும். அத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.100-ஐச் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், எம்பிசி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்குக் கட்டணத்தில் இருந்து விலக்கு உண்டு.


எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வதற்கு வெளியிடப்படும். சான்றிதழ்களின் சரிபார்ப்பிற்குப் பின்னர், தகுதியொன விண்ணப்பதாரர்கள், அவர்கள் சார்ந்த பிரிவு, காலிப் பணியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.




தேர்வு முடிவுகள்


அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அதே மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். நவம்பர் மாதத்தில் நேர்காணல் நடத்தப்படும். 


தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை


ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும். டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.


டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க: https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==


கூடுதல் விவரங்களுக்கு: https://ucanapplym.s3.ap-south-1.amazonaws.com/tnpsc/PIY0000001/notification/2022_07_CCSE4_g4_tam_2022-03-29_23-34-04.pdf


வருங்காலங்களில் கணினி வழியில் தேர்வை (CBT) நடத்தவும் டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.