குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 10,117-ல் இருந்து  10,748 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 


தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 24ஆம் தேதி நடத்தப்பட்டது. 


தாமதமான தேர்வு முடிவுகள்


இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வெளியாகி இருந்தால் அதே மாதத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு, நவம்பர் மாதத்தில் அவை சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், தேர்வு முடிவுகள் தாமதமாகின.


2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 8 மாதங்கள் கழித்து மார்ச் 24ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. எனினும் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை. 


கொரோனா காலத்தில் தாமதமாக தேர்வு நடைபெற்றதால், காலிப் பணியிடங்களை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று குரூப் 4 தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முதல்வருக்குக் கோரிக்கை மனுவையும் அனுப்பினர்.


எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல  அரசியல் தலைவர்கள் இது குறித்துக் கோரிக்கை விடுத்தனர்.  அரசுத் துறைகளில் காலியாக உள்ள 20,000 பணியிடங்களை ஆவது உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.




காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு


இதற்கிடையே முதலில் 7301 காலி பணியிடங்களுக்காக தேர்வு நடைபெற்ற நிலையில், ஏப்ரல் மாத நிலவரப்படி காலிப் பணியிடம் அதிகரித்ததால், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக உயர்ந்தது. திருத்தப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 


இதையடுத்து ஜூன் மாத நிலவரப்படி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.


தேர்வர்கள் மகிழ்ச்சி


இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.  குறைந்தபட்சம் 15 ஆயிரமாக காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.