குரூப் 4 கலந்தாய்வு எந்த வரிசையில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.


2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 15,91,429 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி வெளியாகின. அதே நாளில் , காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டதன் மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்தது. அதாவது சுமார் 10 ஆயிரம் காலி இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை 16 லட்சம் பேர் எழுதினர். 


எப்போது கலந்தாய்வு?


தொடர்ந்து குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கின. இந்த நிலையில், குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கான கலந்தாய்வு கலந்தாய்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தேசமாகத் தொடங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது. 


இந்த நிலையில், கலந்தாய்வு எப்படி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ (Tamil Nadu Public Service Commission) தனது எக்ஸ் பக்கத்தில் கூறி உள்ளதாவது:


''ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு 4-ன் பல்வேறு பதவிகளுக்கான கலந்தாய்வு எந்த வரிசையாக நடைபெறும்‌?


பல்வேறு பதவிகளுக்கான கலந்தாய்வு கீழ்க்கண்ட வரிசையில்‌ நடைபெறும்‌.


1. இளநிலை உதவியாளர்‌ மற்றும்‌ கிராம நிர்வாக அலுவலர்‌


2. தட்டச்சர்‌


3. சுருக்கெழுத்து தட்டச்சர்‌


உடற்தகுதித்‌ தேர்வு மற்றும்‌ நடைச் சோதனை


4. வனக்காப்பாளர்‌ மற்றும்‌ ஓட்டுநர்‌ உரிமத்துடன்‌ கூடிய வனக்காப்பாளர்‌


5. வனக்காவலர்‌ மற்றும்‌ வனக்காவலர்‌ (பழங்குடியின இளைஞர்‌)''


இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


குரூப் 4 போட்டித் தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப நடத்தப்படுகிறது. தற்போது வனக் காப்பாளர், வனக் கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தத் தேர்வை நடத்துவது குறிப்பிடத்தக்கது. 


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/