குரூப் 4 தேர்வு தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுப் பணிகள் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


குரூப் 4 என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு 4 பணிகளில்‌ அடங்கிய தட்டச்சர்‌ பதவிக்கு நேரடி நியமனம்‌ செய்யும்‌ பொருட்டு, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, 30.03.2022 நாளிட்ட அறிவிக்கை எண்‌.07,2022-இன்‌ வாயிலாக விண்ணப்பங்களைக்‌ கோரி இருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 24.07.2022 மு.ப அன்று நடைபெற்று, எழுத்துத் தேர்வில்‌ விண்ணப்பதாரர்கள்‌ பெற்ற மதிப்பெண்‌ மற்றும்‌ தரவரிசை விவரங்கள்‌ 24.03.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்‌டன.


ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு 4 பணிகளில்‌ அடங்கிய தட்டச்சர்‌ பதவிக்கான சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்வு 21.08.2023 முதல்‌ 11.09.2023 வரை (ஞாயிறு, ஓணம்‌ (29.08.2023) மற்றும்‌ கிருஷ்ண ஜெயந்தி (06.09.2023) நீங்கலாக) தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, எண்‌.3, தேர்வாணையச்‌ சாலை (பிராட்வே பேருந்து நிலையம்‌ மற்றும்‌ கோட்டை ரயில்‌ நிலையம்‌ அருகில்‌), சென்னை- 600 003-ல்‌ உள்ள தேர்வாணைய அலுவலகத்தில்‌ நடைபெற உள்ளது.


மேற்படி சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்விற்கு அழைக்கப்படும்‌ விண்ணப்பதாரர்களின்‌ மதிப்பெண்கள்‌ , ஒட்டுமொத்த தரவரிசை எண்‌ / இட ஒதுக்கீட்டு விதி மற்றும்‌ இப்பதவிக்கான காலிப் பணியிடங்களின்‌ அடிப்படையில்‌ தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ பட்டியல்‌
தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்‌டுள்ளது.


தபால்‌ மூலம்‌ அனுப்பப்பட மாட்டாது


சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்விற்கான நாள்‌, நேரம்‌ மற்றும்‌ விவரங்கள்‌ அடங்கிய அழைப்புக் கடிதத்தினை விண்ணப்பதாரர்கள்‌ தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in மூலம் பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அதற்கான விவரம்‌ குறுஞ்செய்தி (SMS) மற்றும்‌ மின்னஞ்சல்‌ (E- Mail) மூலம்‌ மட்டுமே தெரிவிக்கப்படும்‌. சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால்‌ மூலம்‌ அனுப்பப்பட மாட்டாது எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.


சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்‌ எழுத்துத் தேர்வில்‌ அவரவர்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ , ஒட்டுமொத்த தரவரிசை / இட ஒதுக்கீட்டு விதிகள்‌ / விண்ணப்பத்தில்‌ அளித்துள்ள தகவல்கள்‌ மற்றும்‌ காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்‌. எனவே, சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கு்‌ண அழைக்கப்படும்‌ அனைவரும்‌ கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம்‌ வழங்கப்படும்‌ என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.


விண்ணப்பதாரர்கள்‌ மேற்படி சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள்‌ மற்றும்‌ நேரத்தில்‌ வரத்தவறினால்‌ அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். 


முன்னதாக தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், நில அளவையர் (Surveyer), வரைவாளர் (Draftman),வரி தண்டலர் (Bill Collector),  பண்டக காப்பாளர் (Store Keeper) உள்ளிட்ட பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜூலை 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.