TNPSC Group 2 2A Result: குரூப் 2, குரூப் 2 ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு - மெயின் தேர்வுகள் எப்போது..?

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்காக நடத்தப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் முடிவுகள் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். மெயின் தேர்வுகள் எனப்படும் பிரதான தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 25-ந் தேதி நடைபெற உள்ளது.

Continues below advertisement

மகளிர் இட ஒதுக்கீடு:

ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள்‌ சென்னை உயர் நீதிமன்றத்தில்‌ நிலுவையில்‌ இருந்தன. மேற்படி வழக்குகளில்‌ சென்னை உயர் நீதிமன்றம்‌ தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில்‌ அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள்‌ மேற்கொள்ளப்பட்டன. உயர் நீதிமன்றத்தின்‌ ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில்‌ உரிய மாற்றங்கள்‌ செய்யும்‌ பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அப்பணிகள் நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு:

2022ம் ஆண்டுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.

4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு 993 குழுக்கள் செயல்பட்டன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. முன்னதாக அறிவித்தது. பின்னர், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இன்று வெளியாகியுள்ளது.

மாணவர்கள் நிம்மதி :

டி.என்.பி.எஸ்.சி. முடிவுகள் வெளியாகாத காரணத்தால் மாணவர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது மாணவர்கள் முடிவுகள் வெளியானதால் மிகுந்த நிம்மதி அடைந்துள்ளனர். பிரதான தேர்வுக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மெயின் தேர்வுகளுக்காக தயாராவதை தீவிரப்படுத்தியுள்ளனர். 

Continues below advertisement