நாட்டின் முன்னாள் துணை பிரதமரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமானவர் எல்.கே. அத்வானி. இந்தியாவில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு அத்வானியின் பங்கு மிகவும் தவிர்க்க முடியாதது. எல்.கே. அத்வானிக்கு இன்று 95வது பிறந்தநாள் ஆகும்.
பிரதமர் வாழ்த்து :
இதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பிறந்த நாள் காணும் அத்வானிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ அத்வானி பிறந்தநாளன்று அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தேன். இந்தியாவின் வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் அறிவுக்கூர்மைக்காக இந்தியா முழுவதும் அவர் போற்றப்படுகிறார்.
பாரதிய ஜனதா கட்சியை கட்டமைத்து, வலுப்படுத்தியதில் அவர் இணையற்ற பங்களிப்பை வழங்கினார். நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் அவர் வாழ பிரார்த்திக்கிறேன்.” அத்வானியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது, அவருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது, அத்வானியின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
வாழ்க்கை குறிப்பு
லால்கிருஷ்ண அத்வானி என்ற முழு பெயருடைய எல்.கே.அத்வானி 1927ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்தவர். இந்தியா – பாகிஸ்தான் பிறந்த பிறகு அவரது குடும்பம் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தது.
பம்பாய் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்ற அத்வானி, ஆர்.எஸ்.எஸ். கொள்கையில் பிடிப்பானவர். மக்களவை உறுப்பினராகவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மத்திய அரசின் முக்கிய துறைகளின் அமைச்சராகவும் பொறுப்பு வகித்த அத்வானி, வாஜ்பாயி தலைமையிலான அரசில் நாட்டின் துணை பிரதமராகவும் பொறுப்பு வகித்தவர். 2014ம் ஆண்டு பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அத்வானியே முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அவருக்கு பதிலாக மோடி முன்னிறுத்தப்பட்டு அவர் பிரதமரானார்.
சமீபகாலமாக வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள அத்வானி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று இந்தியாவில் ரத யாத்திரையை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.